Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர், பொறியாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு: சுற்றுச்சுவர் இடிந்து 7 பேர் காயமான விபத்தில் நடவடிக்கை

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவமனை உரிமையாளர், மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் 3 பொறியாளர்கள் மீது போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மீனாட்சி தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு, மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கட்டும்பணி கடந்த ஒருவாரமாக நடந்துவந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவருக்கும் அதன் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்துக்கும் இடையே உள்ள காலியிடத்தில் மணல் கொட்டி நிரப்பும் பணி நடந்தது. 20-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 12 அடி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், உத்திரமேரூரைச் சேர்ந்த முருகன் (38), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவைச் சேர்ந்த எத்திராஜ் (60), பூஞ்சோலை (40), சாந்தி (31), மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சசிகலா (40), பாபு (39), ரேகா (25) ஆகிய 7 தொழிலாளர்கள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் விபத்து நிகழ்ந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரேகா மற்றும் பாபு ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், விபத்தில் தப்பிய தொழிலாளர்கள் சிலர் பத்திரிகையாளர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மூலம், விபத்து குறித்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் கோட்டாட்சியர் சந்திரன் மற்றும் டி.எஸ்.பி., பாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பிறகு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, தொழிலாளர்கள் சரியான சிகிச்சை இல்லை என புகார் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த அனைவரும் பயிற்சி மருத்துவர்கள் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தொழிலாளர்கள் நலன் கருதி அனைவரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நிகழ்ந்ததை மறைத்த புகாரில் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மருத்துவமனை உரிமையாளர் ராதாகிருஷ்ணன், கோகுல் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் மீதும் கட்டிட பொறியாளர்கள் பிரகாஷ் குமார் (40), சம்பந்தன் (50), பிரகாஷ் குமார் (53) ஆகியோர் மீதும் ஏனாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் புகார் அளித்தார். இதன் பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x