Published : 06 Aug 2014 05:45 PM
Last Updated : 06 Aug 2014 05:45 PM

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்: பேரவையில் ஜெயலலிதா பெருமிதம்

இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழகம்தான் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான முதல்வர் தனது பதிலுரையில் கூறும்போது, "பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன என்று தேமுதிக உறுப்பினர் குறிப்பிட்டுள்ளது தவறான தகவல். கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், மற்ற அனைத்து வகையான குற்றங்களும், அனைத்து இனங்களிலும் குறைந்துள்ளன என்பதை ஆணித்தரமாக கூற முடியும்.

பெண்களுக்கு எதிரான, பாலியல் ரீதியான, பலாத்கார குற்றங்களாக இருந்தாலும் சரி, கொலைக் குற்றங்களாக இருந்தாலும் சரி, வரதட்சணைக் கொலைகளாக இருந்தாலும் சரி, கன்னக் களவு குற்றங்களாக இருந்தாலும் சரி, அனைத்து இனங்களிலும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தல் போன்ற கொடுங்குற்றவாளிகள் பிணையில் வெளிவராத வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மாநிலத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்கள் இழைப்பதும் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகின்றன.

புதுடெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், சில விஷமிகளால் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, நாட்டிலேயே முதன்முதலாக பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், 13 அம்சங்கள் கொண்ட ஒரு செயல் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்தது.

பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான்.

அவையிலும், அவைக்கு வெளியேயும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும், குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் தே.மு.தி.க.வினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி இங்கே பேசுகிறார்கள். முதலில் தே.மு.தி.க. உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை அவைக்கு உள்ளேயும், வெளியேயும் காப்போம் என்ற உறுதிமொழியை அளித்துவிட்டு அதன் பிறகு காவல் துறை மானியத்தின் மீது பேசலாம்.

தமிழகத்தில் போராட்டங்கள் பெருமிதமே!

தமிழ்நாட்டில் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றால், மக்கள் அத்தகைய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று பொருள் அல்ல. இங்கே தாராள மனதுடன், உண்மையான ஜனநாயகக் கோட்பாட்டின்படி யார் போராட்டம் நடத்த விரும்பினாலும், அவர்களுக்கு அனுமதியைத் தருகிறோம். இதுவே மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அனுமதியே தருவதில்லை. ஆகவே, இதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை உறுப்பினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாநிலத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், பொதுநலப் பிரச்சனைகளுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும், அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் இயக்கங்களை அமைத்து சம்பந்தப்பட்டவர்களை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாமலோ அல்லது அவற்றை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும் போதிலோ, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி அப்பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்கின்றனர்.

அரசு நிர்வாகம் தலையிட்டும் பிரச்சினைகள் முடிவுக்கு வராத போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாயிற் கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற அமைதியான மக்கள் இயக்கப் போராட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி தேவையான பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். எனவே, அமைதியான சூழ்நிலையில் நடக்கும் மக்கள் இயக்கப் போராட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதில்லை.

அமைதியான போராட்டங்களை கைவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதம், சாலை மறியல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், நிர்வாகத்தினரை தொழிற்சாலைகளுக்குள் செல்லவிடாமல் தடுத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பொது அமைதி சீர்குலைய வாய்ப்பிருந்தால் மட்டுமே காவல்துறையினர் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி தர உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு நிச்சயமாக பங்கம் ஏற்படும் என்று காவல் துறையினர் முடிவு செய்யும் சமயங்களில் மட்டுமே போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே, உரிய கால அவகாசத்துடன் பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் எவ்வித மக்கள் இயக்கங்களுக்கும் காவல் துறையினர் அனுமதி மறுப்பதோ அல்லது இழுத்தடிப்பதோ கிடையாது.

2012-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது அகில இந்திய அளவில் நடைபெற்ற போராட்டங்களில் 4-ல் ஒரு பகுதி ஆகும். கேரளாவில் 781 போராட்டங்களும், மேற்கு வங்கத்தில் 1901 போராட்டங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரமே போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக்கும்.

இருபத்தோராயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன என்றால் தமிழகத்தில் ஜனநாயகம் நல்ல முறையில் தழைத்தோங்குகிறது என்று பொருள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x