Published : 15 Oct 2018 09:12 PM
Last Updated : 15 Oct 2018 09:12 PM

பெருங்குடியில் துயரம்: கிணற்றை தூர்வாரிய 2 தொழிலாளிகள் விஷவாயு தாக்கி பலி

 

பெருங்குடி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தூர்வார இறங்கிய 2 கூலித் தொழிலாளிகள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெருங்குடியை அடுத்த கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் கிணறு ஒன்று உள்ளது. அது நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து தூர்த்துப்போய் இருந்துள்ளது. இதனிடையே தண்ணீர் பிரச்சினை காரணமாகவும், மழைக்காலம் நெருங்குவதாலும் கிணற்றை தூர்வாரி பயன்படுத்த எண்ணினார். இதற்காக வேளச்சேரியிலிருந்து ஆறுமுகம் மற்றும் குமார் என்ற இரண்டு தொழிலாளர்களை கூலிக்கு பேசி கிணற்றை தூர்வார அழைத்து வந்தார்

.

தூர்வார வந்த இருவரும் கிணற்றின் தன்மை அறியாமல் அது நீண்டகாலமாக பயன்படுத்தாமல் இருப்பது தெரியாமல் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிணற்றில் இறங்கியுள்ளனர். கிணற்றில் இறங்கிய சில நிமிடங்களில் இருவரும் மூர்ச்சையுற்று உள்ளே விழுந்துள்ளனர்.

உள்ளே இறங்கிய தொழிலாளிகள் மயக்கமுற்று உள்ளே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக யாரையும் கிணற்றுக்குள் இறங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

ராஜேந்திரன் வீட்டுக்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் விஷவாயு பரவி அதனால் தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக உள்ளே இறங்கி தொழிலாளர்களது உடலை மேலே கொண்டுவந்தனர். சம்பவம் பற்றி துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக வந்த காவல்துறையினர் அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x