Published : 06 Oct 2018 03:19 PM
Last Updated : 06 Oct 2018 03:19 PM

தினகரன் ஆட்கள் பாஜகவினருக்கும் தூது விட்டனர்: தமிழிசை பகிரங்க குற்றச்சாட்டு

தினகரன் ஆட்கள் பாஜகவினருக்கும் தூது விட்டனர் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல தூண்களைக் காணவில்லை என பக்தர்கள் ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளனர். திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கோயில்களைப் பாதுகாக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் கல்வி நிலையங்களையும் பாதுகாக்கவில்லை. அதனால், கல்வி வியாபாரமாக ஆகிக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழிசை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தினகரனை சந்தித்ததாக துணை முதல்வர் ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளாரே?

ஓபிஎஸ் நடத்தியது தர்ம யுத்தமா? தர்ம சங்கடமான யுத்தமா என்பது எனக்குத் தெரியாது. அது அவர்களுக்குள்ளே நடக்கும் போர். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால், சில நாட்களுக்கு முன்னால், தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவினரைச் சந்திக்க வேண்டும் என பலமுறை தூது விட்டிருக்கிறார்கள். யார், யார் எப்போது, எதற்காக சந்தித்தார்கள் என்பது இப்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் பரஸ்பர குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் சில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

துணைவேந்தர் நியமனத்தில் பல கோடிகள் புரண்டிருப்பதாக ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளாரே?

ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு 9 துணைவேந்தர்கள் நேரடியாக தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். படிக்கின்ற மாணவர்களுக்கு நேர்மையான துணைவேந்தர்கள் இருக்க வேண்டும் என்பது தமிழகத்தில் இப்போதுதான் நனவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் எப்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.

பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளது ஏன்?

பரபரப்பான சூழ்நிலை இருந்தாலும் முதல்வர் டெல்லி செல்வது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. எய்ம்ஸ் பிரச்சினையில் ஏமாற்றி விட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர். அதனால், ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக டெல்லி செல்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x