Published : 15 Oct 2018 02:08 PM
Last Updated : 15 Oct 2018 02:08 PM

அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லம் மற்றும் அலுவலகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக உணவுத் துறை அமைச்சராக இருப்பவர் காமராஜ். இவரது சொந்த ஊர்  மன்னார்குடி அருகேயுள்ள சேரன் குளம். அமைச்சரின் மூத்த சகோதரர் நடனசிகாமணியின் சம்பந்தி மனோகரன். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரமங்கலத்தைச் சேர்ந்த மனோகரன், கூட்டுறவு சங்கத்தலைவராக இருந்தவர். இவரது வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மனோகரன் 10 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் சாலை அமைக்கும் பணி,  மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்ததாரர். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரயில்வே வழித்தட பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில்  இவருக்குச் சொந்தமான தஞ்சை திருக்கருக்காவூர் திருமண மண்டபம், மன்னார்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், , லாட்ஜ், நீடாமங்கலம் அருகேயுள்ள கூவனூரில் உள்ள கல்குவாரி, வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலைமுதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சாலை ஒப்பந்தத்தாரரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இல்லத்திலும் ரெய்டு நடந்தது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் காமராஜின் நெருங்கிய உறவினருக்கு  சொந்தமான இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையின் முடிவில்தான் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்கிற விவரங்கள் வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x