Last Updated : 11 Oct, 2018 11:21 AM

 

Published : 11 Oct 2018 11:21 AM
Last Updated : 11 Oct 2018 11:21 AM

உணவுப்பொருட்கள் வாங்கி வந்தபோது பரிதாபம்: மலைவாழ் மக்கள் 5 பேர் விபத்தில் உயிரிழப்பு

வால்பாறை மலைப்பாதையில் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பல மணிநேரத்துக்கு பின்னர் காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் 15 பேர் புதன்கிழமை கோட்டூரில் நடைபெறும் வாரச்சந்தையில் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு இரவில் மினி லாரியில் குருமலை திரும்பிக் கொண்டிருந்தனர்.

வால்பாறை சாலையில் காடம்பாறை அருகே சென்றபோது மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மலைப்பாதையில் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியாக நீண்ட நேரம் வாகனங்கள் செல்லாததால் விபத்து ஏற்பட்டது தெரியவில்லை. பின்னர் அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு போலீஸாருக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காடம்பாறை போலீஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சன்னாசி, மல்லப்பன், ராமன், வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து குருமலை, காட்டுப்பட்டி பகுதி மக்கள் கூறியதாவது:

“குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், வாரம் ஒருமுறை 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டூர் வாரச்சந்தைக்கு சென்று எங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் வருவது வழக்கம்.

நேற்று அதேபோல் பொருட்களை வாங்கச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x