Published : 23 Aug 2014 01:50 PM
Last Updated : 23 Aug 2014 01:50 PM

தனியார் பொறியியல் கல்லூரியை பெற்றோர் முற்றுகை: முதலாம் ஆண்டு மாணவர்கள் வெளியேற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் அடுத்துள்ள குன்னவாக் கம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகம் அண்ணா பல்கலையுடன் இணைந்து மாணவர் சேர்க்கை நடத்திவந்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் மத்திய அரசின் ஏஐசிடிஇ அங்கீ காரம் பெற்றால்தான் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் தனியார் கல்லூரி பங்கேற்க முடியும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

குன்னவாக்கம் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் 2014-ம் ஆண்டுக்கான ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருந்தது. ஆனால், அங்கீகாரம் கிடைக்காத நிலையில் கல்லூரியில் பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதன்மூலம், கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடப்பிரிவில் 118 மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், பல்வேறு காரணங் களால் கல்லூரிக்கு இந்த ஆண்டு ஏஐசிடிஇ அங்கீகாரம் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. அதனால், கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கப்பட்ட 118 மாண வர்களை வேறு ஏதேனும் கல்லூரி யில் சேர்ப்பதாக பெற்றோர்களிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ள னர். இதையடுத்து, வெள்ளிக் கிழமை மாணவர்களின் பெற்றோர் கல்லூரியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து, குன்னவாக்கம் தனியார் பொறியியல் கல்லூரியின் மேலாளர் குமரனிடம் கேட்டபோது,

“கல்லூரிக்கு எப்படியும் ஏஐசி டிஇ அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மாணவர் களைச் சேர்த்தோம். ஆனால், அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும், மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் அங்கீ காரம் தொடர்பான விவரங்களை தெரிவித்து அதன்பின்தான், மாண வர்களைச் சேர்த்தோம். தற்போது அங்கீகாரம் கிடைக்காததால் இந்த மாணவர்களை நாங்களே எங்களின் நேரடி பார்வையில் உள்ள வேறு தனியார் கல்லூரியில் சேர்ப்பதாக கூறியுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து, கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் கூறியதாவது,

“கல்லூரி நிர்வாகம் அங்கீகாரம் தொடர்பாக எந்த விவரத்தையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. மேலும், புதன்கிழமை மாலை தொலைபேசியில் திடீரென கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், உங்களின் பிள்ளையை வேறு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறினர். பல லட்சம் ரூபாய் கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தி எங்களின் பிள்ளைகளை இங்கு சேர்த்தோம். தற்போது, திடீரென அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, வேறு தனியார் கல்லூரியில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர். இதனால், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை முடிய ஓரிரு நாட்களே உள்ளதால், வேறுவழியின்றி இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வேறு கல்லூரியில் கட்டாயமாக சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, உயர் கல்வித் துறை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x