Published : 24 Oct 2018 03:42 PM
Last Updated : 24 Oct 2018 03:42 PM

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உடனடியாக தலையிட்டு நிறுத்துக; மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (புதன்கிழமை) எழுதிய கடிதத்தில், “கடந்த செப்டம்பர் மாதம், 9-ம் தேதி அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழுவானது, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கேரள அரசின் செயலும், அதனை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதும் உச்ச நீதிமன்றம் 7.05.2014 அன்று அளித்த உத்தரவுக்கு முற்றிலும் எதிரானதாகும். புதிய அணை கட்டும் முடிவை கேரள அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்க முடியாது என்றும், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

கேரள அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசிடம் திருட்டுத்தனமாக அனுமதி பெற்றது. இதற்காக, கேரள அரசு தமிழக அரசின் ஆலோசனையையோ, ஒப்புதலையோ பெறவில்லை. இதையடுத்து, 16.5.2015 அன்று, தேசிய வன பாதுகாப்பு வாரியத்தின் நிலைக்குழுவின் உறுப்பினர்-செயலாளருக்கு எதிராக தமிழ்நாடு அரசு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

கேரளாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு வனத்துறை அமைச்சகத்திற்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 10.6.2015 அன்று கடிதம் எழுதியதை இங்கே நினைவு கூர்கிறேன். இதையடுத்து கேரள அரசின் திட்டத்தை மத்திய அரசு ஜூலை, 2015-ல் கைவிட்டது.

அதேபோன்று, தற்போதும் உடனடியாக இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அளித்துள்ள அனுமதியைத் திரும்பப் பெற வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், வருங்காலத்திலும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரள அரசு செயல்பட்டால் அதனை ஊக்குவிக்கக் கூடாது என வனத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x