Published : 23 Oct 2018 12:39 PM
Last Updated : 23 Oct 2018 12:39 PM

4 நாட்களில் 3 தொடர் கொலைகள்; ஐஸ் ஹவுஸில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை: சென்னையில் தலைதூக்கும் ரவுடிகள்

சென்னையில் மீண்டும் ரவுடிகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. நேற்றும் நடு சாலையில் காங்கிரஸ் பிரமுகர் கொல்லப்பட்டுள்ளார்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் ரியல் எஸ்டேட் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் அப்பாஸ் (40). இவர் சொந்தமாக பாஸ்ட் ஃபுட் கடையையும் நடத்தி வந்தார். காங்கிரஸில் அப்பகுதி இளைஞர் அணிச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பெல்ஸ் சாலையில் தாக்கப்பட்டனர். இதில் அப்பாஸுக்கு கத்தியால் காயம் உண்டானது. அதன் பின்னர் அப்பாஸ் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் உள்ள தனது பாஸ்ட் ஃபுட் கடை அருகில் உள்ள டீக்கடை அருகே அப்பாஸ் நின்று கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அப்பாஸை சூழ்ந்துகொண்டு வெட்ட முனைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனாலும் அந்தக் கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக பின்னந்தலையில், கழுத்தில் வெட்டியது.

இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அப்பாஸ் விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அப்பாஸை வெட்டியவர்கள் சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் அப்பாஸை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அப்பாஸ் பலியானார். இந்த கொலைச் சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் உள்ள மயிலாப்பூர் துணை ஆணையர் காவல் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதிமுதல் 3 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன.

இதில் இரண்டு கொலைகள் ரவுடிகளால் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. சென்னையில் குறிப்பாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. ரவுடிகள் சாதாரணமாகத் திரிவதும் வம்பிழுப்பதும் என கடந்த 91-96-ம் ஆண்டுகளில் நிலவியது போன்ற சூழ்நிலை நிலவுவதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜாம் பஜாரில் வெற்றிகரமாக வலம் வந்த பிரபல ரவுடி ஒருவரின் வாரிசுகள் புதிதாக தலைதூக்குவதாகவும், கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் போலீஸார் கையில் சிக்கிய ரவுடிகள் சிலரை விசாரிக்காமல் அசட்டையாக விட்டதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் அதிக அளவில் கஞ்சா புழக்கமும், கூலிப்படையினர் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதும் சமீபகாலமாக சென்னையில் வீடுபுகுந்து திருடுவதும் அதிகரித்து வருகிறது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லையில் அதிக அளவில் குற்றச்செயல்கள் நடக்கும் நிலையில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர் கொலைகளைத் தடுக்க போலீஸார் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x