Last Updated : 15 Oct, 2018 02:46 PM

 

Published : 15 Oct 2018 02:46 PM
Last Updated : 15 Oct 2018 02:46 PM

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதை சுட்டிக்காட்டி வீட்டிலிருந்து சட்டப்பேரவைக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் சைக்கிளில் வந்தார். இது எதிர்ப்பல்ல-மக்களின் உணர்வு என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் உயர்வினைக் கண்டித்து பல்வேறு தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் பெட்ரோல் டீசல் உயர்வினைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டிலிருந்து சட்டப்பேரவைக்கு சைக்கிளிலில் புறப்பட்டார். கந்தப்ப முதலியார் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள சட்டப்பேரவைக்கு சபாநாயகர் அரசு வாகனத்தினைப் பயன்படுத்தாமல் சைக்கிளில் பயணித்து வந்தார்.

செய்தியாளர் சந்திப்புக்காக கமிட்டி அறைக்குச் சென்று கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி இதைக் கேள்வியுற்று வாயிலில் நின்று கைகுலுக்கி வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், ''நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது. மக்களை வாட்டுகிறது. அரசுக்கும் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. அதை என்னால் முடிந்த அளவு குறைக்க முடிவு எடுத்து சைக்கிளில் வந்தேன். நகரப் பகுதிகளிலும், தொகுதிகளுக்குச் செல்லும்போதும் சைக்கிளைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று முடிவு எடுத்துள்ளேன். சைக்கிள் பயன்படுத்துவது நாட்டுக்கும், அரசுக்கும், குடும்பத்துக்கும், குறிப்பாக உடலுக்கு நல்லது. எனது உடல் ஒத்துழைக்கும் வரை சைக்கிளைப் பயன்படுத்த உள்ளேன்.

நகரப்பகுதியில் அரசு விழாவுக்கோ, அரசுப் பணிக்கோ பல கார்களில் அதிகாரிகள் வருகின்றனர். அதையும் தவிர்க்க வேண்டும். எரிபொருள் சிக்கனத்தை அவர்களும் பின்பற்ற வேண்டும். முதல்வர், அமைச்சர் கழிவுநீர் கால்வாய் தூய்மை செய்வதுபோல் அதிகாரிகளும் முன்வர வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

எரிபொருள் உயர்வுக்காக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சைக்கிள் பயணமா என்று கேட்டதற்கு, "எதிர்ப்பு அல்ல. மக்கள் உணர்வை சைக்கிள் ஓட்டி வெளிப்படுத்துகிறேன். தினந்தோறும் விலை நிர்ணயத்தால் மக்கள் அவதியடைகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x