Published : 05 Oct 2018 12:50 PM
Last Updated : 05 Oct 2018 12:50 PM

சென்னை புழல் சிறையில் மீண்டும் பிரியாணி சர்ச்சை: வைரலாகும் 3 காணொலிகள்

புழல் சிறையில் கைதிகள் கூடத்தை ஸ்டோர் ரூமாக்கி, தோட்டத்தில் பிரியாணி தயாரித்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மீண்டும் தகவல் வெளியாகி பரபரப்பாக உலா வருகிறது. 3 காணொலிகள் வைரலாகி வருகிறது.

தமிழக சிறைத்துறைக்குள் நடக்கும் முறைகேடுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவுக்கு சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. பரோலில் செல்ல, ஜாமீன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தனித்தனி கட்டணம் போட்டு வசூலிப்பதாக வந்த புகாரில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

சமீபத்தில் புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதும், வண்ணமயமான சிறைக்கொட்டடியில் கட்டில் மெத்தை, தொலைக்காட்சி, செல்போன் வசதியுடன் வாழ்வதும் புகைப்படங்களாக வெளியானது. இதை மறுத்த சிறை நிர்வாகம் ஏ கிளாஸ் கைதிகள், பண்டிகை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என காரணம் கூறியது.

ஆனால் சிறைத்துறை கூடுதல் டிஜிபியே நேரில் சென்று சோதனை நடத்தினார். சில கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். 5 முறைகளுக்குமேல் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள், 70 ரேடியோக்கள், எண்ணிலடங்கா செல்போன்கள், பிரியாணி தயாரிக்க வைத்திருந்த 70 கிலோ பாசுமதி அரிசி, பிரியாணி தயாரிக்க வைத்திருந்த மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர கைதிகளிடம் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பது தனிக்கதை. கைதிகளுக்கு இவ்வாறு சலுகைகள் அமைக்க உதவிய 17 வார்டன்கள் மாற்றப்பட்டனர். பெரிய அளவிலான அதிகாரிகள் யாரும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மூன்று காணொலி காட்சிகள் வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் புழல் சிறைக்குள் கைதிகள் உடமைகள் வைக்கப்படும் அறையில் பெரிய அளவில் மசாலா பொருட்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதும், சிலர் அமர்ந்து காய்கறிகளை வெட்டும் காட்சியும் ஒரு காணொலியில் உள்ளது.

மற்றொரு காணொலி சிறை அறைகள் வழியே பயணிக்கிறது. அதில் சிறைக்கம்பிகளுக்கிடையே அறையில் மூட்டை மூட்டையாக அரிசி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. மற்றொரு காணொலி சிறைக்கம்பிகளுக்குள் பயணித்து ஒரு கைதியின் அறைக்குள் செல்கிறது. அந்த அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, எப்.எம்.ரேடியோ, செல்போன் சார்ஜர், கட்டில் என சகல வசதிகளும் உள்ளது.

ஓரத்தில் விலை உயர்ந்த ஷுக்கள் உள்ளது. கைதியின் அறைவழியாக தோட்டத்தை காண்பிக்கும் அந்த காணொலியில் வாழை மரங்கள் புல்வெளிகள் அடர்ந்த தோட்டத்தில் மர அடுப்பில் சிலர் பெரிய பாத்திரங்களில் பிரியாணி சமைக்கும் காட்சி ரகசியமாக படம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்கு தனி சமையற்கூடம், ஸ்டோர் ரூம், சமையலறை உள்ள நிலையில் இப்படி ரகசியமாக தனியாக தயாரிக்கப்படும் பிரியாணிகள் பொட்டலம் கட்டப்பட்டு ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்படுவதாகவும், முட்டை பொடிமாஸ் ரூ. 200 வரை விற்கப்படுவதாகவும், சோதனைக்கு முன்னர் உள்ளே முறைகேடாக விற்கப்பட்ட பீடி, சிகரெட், கஞ்சா போன்றவை இருமடங்கு விலைக்கு விற்கப்படுவதாகவும் நாளேடுகள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கண்ட காணொலிகாட்சிகள் வெளியாகியுள்ளது. இவைகள் புழல் சிறையில் எடுக்கப்பட்டதா? வந்திருக்கும் தகவல்கள் உண்மையா? இன்றும் முறைகேடுகள் தொடர்கிறதா? என்பதை சிறைத்துறை நிர்வாகம் தெளிவுப்படுத்தவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x