Published : 21 Oct 2018 04:20 PM
Last Updated : 21 Oct 2018 04:20 PM

ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: டி.ஆர்.பாலு பதில்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாதவராக முதலமைச்சர் இருக்கிறார் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளரும் - மத்திய முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாத முதலமைச்சர் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் பேசி வருகிறார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த போது நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புக்குரிய சாதனைகள் எதையும் புரிந்துகொளாமலே கொச்சைப்படுத்த முனைந்திருக்கிறார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி. சாலைப்பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்யும் அதிகாரம் எல்லாம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. “1988 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்” கீழ் அமைக்கப்பட்டு இந்த ஆணையம் 1995-லிருந்து தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை முழுக்க முழுக்க முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தன்னாட்சி பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் “கமிஷன், கலெக்சன், கரெப்சனுக்காக”என்றே திட்டமிட்டு விடப்படும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை ஒப்பிடுவதே முதல் தவறு. குறைந்தபட்சம் அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களிடம் கேட்டிருந்தால் இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளும்படி பழனிசாமிக்கு போதித்திருப்பார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய சில டெண்டர்களை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், “ஒரு கிலோ மீட்டருக்கு 8.78 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள்” என்று எழுதிக் கொடுத்ததைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே கக்கியிருக்கிறார். ஆனால், “செங்கம்பள்ளி - கோவை - கேரளா” எல்லை வரை உள்ள 82 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைப் பணி கிலோமீட்டருக்கு 4.14 கோடி ரூபாய் மதிப்பிலும், 125 கிலோ மீட்டர் தூரம் உள்ள “திருச்சி- மதுரை” தேசிய நெடுஞ்சாலை பணி ஒரு கிலோ மீட்டருக்கு 3.36 கோடி ரூபாய் என்ற அளவிலும், கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து பூந்தமல்லி வரையுள்ள 300 கிலோ மீட்டர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஒரு கிலோ மீட்டருக்கு 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதை வசதியாக மறைத்துள்ளார். “வடக்கு- தெற்கு காரிடார் தேசிய நெடுஞ்சாலை (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி) பகுதிகள் சாலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட “சேலம்- செங்கம்பள்ளி” சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5.65 கோடி ரூபாய் மட்டுமே ஆணையம் வழங்கியிருக்கிறது. ஆனால் கிலோ மீட்டருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தவறாகக் கூறுகிறார்.

“ஒரு கிலோ மீட்டருக்கு எத்தனை கோடி ரூபாய்?” என்று மதிப்பீடு செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு அம்சங்களைப் பார்க்கிறது. அது நான்கு வழிச்சாலையா, இரு வழிச் சாலையா, ஆறு வழிச்சாலையா, எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது, தரைப்பாலங்கள் எத்தனை, சாலையின் உயரம் எவ்வளவு, ஆற்றுப் பகுதிகளில் அமைக்க வேண்டிய சாலையா என்பதையெல்லாம் ஆராய்ந்து, உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை வடிவமைத்து மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள, அல்லது போடப் போகின்ற நெடுஞ்சாலைகள் ஊழலுக்காவே - கொள்ளையடிப்பதற்காகவே வடிவமைக்கப் படுகிறது. உலக தரமில்லை, உள்ளூர் தரத்திலேயே சாலைகள் இல்லை என்று இடிந்து விழுந்த புதுக்கோட்டை சாலையே முதலமைச்சரின் முகத்தில் ஆழமாகக் கரி பூசியிருக்கிறது.

“ஆன்லைன் டெண்டர்” பற்றி முதலமைச்சர் பேசியிருக்கிறார். அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற பணிகள் குறித்த ஆன்லைன் டெண்டர்கள் குறித்து இப்போதே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? தன் ஊழலுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல்- ஏழு வருடம் கழித்து தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஊழல் என்கிறார் முதலமைச்சர். தைரியமிருந்தால் வழக்குப் போடுங்கள். அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x