Published : 08 Oct 2018 09:30 AM
Last Updated : 08 Oct 2018 09:30 AM

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியா?- தினகரன் சந்திப்பால் ஆதரவாளர்கள் கலக்கம்

டிடிவி தினகரன் சந்திப்பு விவகாரம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், அதிமுகவில் அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏவின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், சமீபத்தில் முதல்வர் கே.பழனிசாமியின் ஆட்சியைச் கலைப்பதற்காக தினகரனை கடந்த ஆண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், தற்போது மீண்டும் அவர் தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சியினர் முன்னிலையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘தான் சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்தே வெளியே வந்தவன், அதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை. கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் பார்க்கிறார்’’ என்று தெரிவித்தார்.

கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், டிடிவி தினகரனைச் சந்திக்க நீங்கள் அவருக்கு தூது விட்டதாகச் சொல்கிறார்களே? என செய்தியாளர்கள் நேரடியாகவே கேட்டதற்கு, அதற்கு நான் உள்ளேயே (கூட்டத்தில்) விளக்கமாகச் சொல்லிவிட்டேனே என்றார். முன்பு திருச்சியிலும் செய்தியாளர்கள் இதே கேள்வியை முன்வைத்தபோது அது பழைய கதை என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தன்னைச் சந்தித்து உண்மை என்றும், மீண்டும் சமீபத்தில் தன்னைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும், தான் அதற்கு மறுத்தாகவும் கூறினார்.

அதற்கு அமைச்சர் தங்கமணி, ஆட்சியைக் கலைக்க முடியாத விரக்தியில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்த தினகரன் பார்ப்பதாகவும், தினகரன்தான், அமமுகவை அதிமுகவுடன் இணைக்க தூது விட்டதாகவும், தாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மற்றொரு பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

ஆனாலும், டிடிவி தரப்பினர் எழுப்பிய இந்த குற்றச்சாட்டால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கடந்த ஆண்டு தினகரனை சந்தித்தது உண்மை, அவர் முதல்வராக விரும்பியதால் அவர் போக்கு பிடிக்காமல் முதல்வர் கே.பழனிசாமியுடன் சேர்ந்ததாகவும், அதன்பின் தற்போது இருக்கிற இடத்தில் அதிமுகவுக்கு விசுவாசமாகவே இருப்பதாகவும், மீண்டும் டிடிவி தினகரனைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினரை எதிர்த்தே ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தம் தொடங்கினார். அவரே அதன்பிறகு கட்சியினருக்குத் தெரியாமல் டிடிவி தினகரனைச் சந்தித்தது அதிமுகவில் அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் நிலவும் இந்த நெருக்கடியும், இடைத்தேர்தலை தள்ளி வைப்பதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுவதால் அமமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் அதிமுகவின் பண பலத்தையும், அதிகார பலத்தையம் எதிர்த்து திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் தேர்தலைச் சந்திப்பதும், அதில் வெற்றி பெறுவது கடினமான காரியம் என்பதால் இடைத்தேர்தல் தள்ளிப்போவது உள்ளுக்குள் அமமுகவினருக்கு சந்தோஷத்தை தந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இடைத்தேர்தலை தள்ளிவைக்காமல் நடத்த வலியுறுத்தி அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு வழக்கம்போல் அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளதால் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் இடையேயான அரசியல் பனிப்போர் பரபரப்பு அடங்காமல் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x