Published : 13 Oct 2018 07:42 AM
Last Updated : 13 Oct 2018 07:42 AM

தமிழக இளைஞர்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவை நனவாக்கியவர் சங்கர் 

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியக் கனவாகக் கொண்ட தமிழக இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் மறைவு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் கிராமத் தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சங்கர். பெற்றோர் தேவராஜன், தெய்வானை. 8-ம் வகுப்பு வரை ஊத்தங்கரையிலும், பின்னர் பிளஸ் 2 வரை நல்ல கவுண்டம்பாளையத்திலும் படித் தார். பிறகு, பிஎஸ்சி விவசாயப் படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் வைஷ்ணவி என்ற மாணவியை ராக்கிங் செய்ததால் ஓராண்டு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கல்லூரியில் முதல் ஆண்டில் சேர்ந்து படிப்பில் சிறந்து விளங்கினார். யாரை ராக்கிங் செய்து சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானாரோ, அதே வைஷ்ணவியை காத லித்து பின்னாளில் திருமணம் செய்துகொண்டார்.

திரைப்படத்துறை ஆர்வம்

திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் சங்கரின் மனதில் இருந்துள்ளது. அதனால், சினிமா கனவோடு ஓராண்டு காலம் சென்னையைச் சுற்றி வந்தார். ‘‘முதலில் படித்து உயர்ந்த இடத்துக்கு வா. பிறகு, சினிமா துறைக்கு போகலாம்’’ என்று அறிவுரை கூறிய உற வினர் ஒருவர், சினிமா துறையில் சாதித்த ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரனை உதாரணம் காட்டி யுள்ளார். அதை ஏற்ற சங்கர், மத்திய அரசு உதவித் தொகையுடன் எம்எஸ்சி விவசாயம் படித்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற ஆசை அவரது மனதில் உருவெடுத்ததால், டெல்லிக்குச் சென்றார். பெரிய அளவில் பொருளாதார வசதி இல்லாத சங்கர், டெல்லியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிக்க பெரிதும் உதவிகரமாக இருந்தவர் வைஷ் ணவிதான். காதலியின் உதவி யோடு படித்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினார். 2 முறை இறுதி தேர்வு வரை சென்றும், அவரால் வெற்றிபெற இயலவில்லை. தன்னால் முடியாததை, தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக இளைஞர்களை அதிக அளவில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ என்ற சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தை சென்னை அண்ணா நகரில் கடந்த 2004-ல் தொடங்கினார். வெறும் 34 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அகாடமியில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சுமார் 900 பேர் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். பலர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணிபுரிகின்றனர். ஐஏஎஸ் தேர்வுக்கு மட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு களுக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி அளித்து வருகிறது.

ஆண்டுக்கு 300 பேர் தேர்வு

முன்பு தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்க டெல்லி உள்ளிட்ட வட மாநிலங் களுக்கு செல்வது உண்டு. ஆனால், தற்போது வட இந்திய மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிப்பதற்காக தமிழகம் நோக்கி வருகின்றனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு பெரும் பங்கு உண்டு. ஆண்டுதோறும் சுமார் 300 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

‘‘சிவில் சர்வீசஸ் தேர்வில் நான் வெற்றி பெற்றிருந்தால் நான் மட்டும்தான் ஐஏஎஸ் ஆகியிருப் பேன். தோற்றதால் இன்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உருவாக் கிக் கொண்டிருக்கிறேன்’’ என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் சங்கர் அடிக்கடி சொல்வது வழக்கம்.

கிராமப்புற, ஏழை மாணவர் களிடம் எவ்வித கட்டணமும் வாங்காமல் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களது ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுகளை நனவாக்கி யவர் சங்கர்.

மாணவர்களுக்கு உந்து சக்தி

சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள் ளும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த உந்துசக்தியாக, வழிகாட்டி யாகத் திகழ்ந்த சங்கரின் மறைவு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத் தையும் ஏற்படுத்தியுள்ளது. அவ ரைப் பற்றிய நினைவுகளை பலரும் சோகத்துடன் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை வருமானவரி இணை ஆணையர் ஆர்.நந்த குமார்: நானும் சங்கரும் 2004-ல் சிவில் சர்வீசஸ் நேர்காணலுக்கு சென்றோம். சிவில் சர்வீசஸ் அதி காரிக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருந்த போதிலும், ஏதோ ஒரு காரணத் தால் அவர் தேர்வில் வெற்றி பெறவில்லை. தேர்வில் தோல்வி அடைந்தாலும் வாழ்க்கையில் அவர் நிறைய சாதித்துள்ளார். ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளை உரு வாக்கியுள்ளார். ஐஏஎஸ் ஆவதே மற்றவர்களுக்கு உதவத்தான். அவரும் ஒரு வகையில் பலருக்கு உதவிதான் செய்துள்ளார். 14 ஆண்டுகளாக அவரை அறிவேன். அவர் இல்லாதது தமிழக மாண வர்கள் இடையே மனோரீதியாக ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து ஐஆர்எஸ் அதிகாரியாகி சென்னை சுங்கத் துறை துணை ஆணையராக (ஏற்றுமதி) பணி யாற்றி வரும் மோகன் கோபு: சங்கர் கடின உழைப்பாளி. சிவில் சர்வீசஸ் தேர்வில் தொடர்ந்து முயன்று வெற்றிபெற முடியாமல் போனாலும், அதில் இருந்து மீண்டுவந்து பயிற்சி மையத்தை சிறப்பாக நடத்தி வந்தார். புவியியல் பாடத்தில் நாட்டிலேயே அவர்தான் மாஸ்டர் என்று கூறலாம். எப்படி கேள்வி கேட்பார்கள்; அதற்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்பதில் பல புதிய உத்திகளை கொண்டுவந்தார். அவரிடம் படிப்பதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சென்னை வந்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு தயாரிப் பில் அவர் ஒரு ராஜாங்கம் என்று சொல்லலாம். அவரது மறைவு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் தமிழக மாணவர்கள் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x