Published : 12 Aug 2014 10:06 AM
Last Updated : 12 Aug 2014 10:06 AM

அம்மா மருந்தகம் திட்டம் பெயரில் ரூ.25 லட்சம் மோசடி? - டிராவல்ஸ் அதிபர் கைது

அம்மா மருந்தகம் திட்டத்துக்கு வாகனங்கள் தேவை எனக் கூறி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வாடகை கார் உரிமையாளர்கள் சுமார் 250 பேரிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கூறியதாவது:

‘தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா மருந்தகம் திட்டத்துக்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வாடகை கார் தேவை என டிராவல்ஸ் நடத்திவரும் கோவை தடாகம் ரோடு வடமதுரை பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத்(28) விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சக வாடகை கார் ஓட்டுநர்கள், அருண்பிரசாத்திடம் ஒப்பந்தம் பெறுவதற்காக ஒரு வாகனத்துக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 13 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் ரூ.20 மதிப் புள்ள அரசு முத்திரையுடன் கூடிய பத்திரத்தை கொடுத்த அருண்பிரசாத், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வருமாறும், அங்கு ஒப்பந்தமும், அரசு ஆணையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி, கோவை மண்டல சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வாடகை கார் உரிமையாளர்கள் வந்தபோது, அப்படி ஒரு திட்டமே இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அருண் பிரசாத்தை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம்’ என்றனர்.

மூன்று மாவட்டங்களிலும் 250 வாடகை கார் ஓட்டுநர்களிடம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு அருண்பிரசாத் ஏமாற்றிவிட்டதாக வாடகை கார் உரிமையாளர்கள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவையை சேர்ந்த கார் உரிமையாளர் ஹரிஹரன் கூறியதாவது, வாடகை கார்களுக்கு 4 வருட ஒப்பந்தம், ஒரு மாதத்தில் 26 நாட்களுக்கு காருக்கு வேலை இருக்கும். வாடகைக்கு காரின் தன்மைக்கு ஏற்ப ரூ. 23 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை வாடகை கிடைக்கும்.

அதனுடன், கார் ஓட்டுநருக்கு ரூ. 4,500 சம்பளம், தினந்தோறும் 200 ரூபாய் பேட்டா மற்றும் பேருந்து செலவுக்கு ரூ. 50 எனவும் வழங்கப்படும் என தெரிவித்து அருண்பிரசாத் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் என்றார்.

அருண்பிரசாத் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x