Published : 18 Oct 2018 02:04 PM
Last Updated : 18 Oct 2018 02:04 PM

இளைஞர்கள் மீது கடுமையாக தாக்கு: திருவல்லிக்கேணி ஆய்வாளர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

உணவு விடுதியில் நடந்த வாய்த்தகராறில் 8 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று இரண்டுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்குத் தாக்கியதாக பொதுமக்கள் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் எதிரில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள் சிலர் கடந்த 14-ம் தேதி இரவு அருகில் உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.

அப்போது ஹோட்டல் ஊழியர்களுக்கும் இளைஞர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் இளைஞர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு புகார் செல்ல அங்கு வந்த போலீஸார் அங்கிருந்த இளைஞர்களையும், அருகில் நின்றிருந்த அதேபகுதியைச் சேர்ந்த ஜெகன் என்கிற இளைஞரையும் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையம் கொண்டுவந்துள்ளனர்.

ஸ்டேஷனில் அவர்களை விசாரித்த காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் சக போலீஸாருடன் சேர்ந்து கடுமையாக தாக்கி பின்னர் சிலபேர் மீது 75-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிக்காமல் அனுப்பியுள்ளனர்.

அவர்கள் பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றனர். திருவல்லிக்கேணி போலீஸார், ஆய்வாளர் மோகன் தாஸ் மீது அப்பகுதி மக்கள் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில் தங்கள் பகுதிக்கு ஆய்வாளர் மோகன் தாஸ் வந்த பின்னர் லாக் நகர் மக்கள் என்றாலே நாலாந்தர குடிமக்கள்போல் கடுமையாக நடப்பது தாக்குவது என மேற்கண்ட சம்பவத்தையும் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளனர். புகார் திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தவிர தாங்கள் தாக்கப்பட்டதற்கும், ஸ்டேஷனில் அவமானப்படுத்தப்பட்டதற்கும் நியாயம் கேட்டு மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து இணையதளம் சார்பில் ஆய்வாளர் மோகன் தாஸிடம் கேட்டபோது ஆமாம் சார் அவனுங்க வேலையே அதுதான் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தகராறு செய்வார்கள்,

அன்றைக்குக் கூட அப்படித்தான் நடந்தது, கூட்டிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டினோம் சார் என்று தெரிவித்தார்

. இரண்டுப்பக்கமும் 75 பிரிவில் வழக்குப்போட்டு அனுப்பினேன் என்று தெரிவித்தார். இரண்டுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு இருந்தும் நீங்கள் ஏன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவில்லை என்று கேட்டதற்கு அவர்களாகப் போய் மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார்கள் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x