Published : 22 Oct 2018 02:51 PM
Last Updated : 22 Oct 2018 02:51 PM

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அதிமுக சுணக்கமா? - முதல்வர் பழனிசாமி பதில்

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அதிமுக வேகமாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

திருச்சியில் இன்று (திங்கள்கிழமை), முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதால் நீங்கள் வழக்கை எதிர்கொள்ள பயப்படுகிறீர்கள் என்று சொல்கிறார்களே?

நான் உயர்ந்த பதவியில் இருப்பதனால், விசாரணை நியாயமாக, நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதனால் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதில் எந்தவிதக் குற்றமும் சொல்லவில்லையே. சாலை அமைப்பதில் எந்தவித முறைகேடும் சொல்லவில்லை. அதனால்தான், என் மீது குற்றம் சொல்லியிருப்பதால் நான் தனியாக மேல்முறையீடு செய்திருக்கிறேன்.

திமுகவும், அமமுகவும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். அதிமுக வேகமாக இல்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறதே?

நான் போகும் இடங்களில் வரும் மக்கள் செல்வாக்கு தான் இதற்கு பதில்.

காவிரியில் தடுப்பணை கட்ட ஒரு குழு அமைக்கப்படும் என்று சொன்னீர்களே?

காவிரி நதிநீர் ஆங்காங்கே உபரியாக வருகின்ற காலகட்டத்தில் தடுப்பணை கட்டி அதைச் சேமிப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாகாமல் அந்தப் பகுதியிலே ஓடுகின்ற ஓடைகளிலே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டி அதை சேமிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான பணிகளை நான்கு மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி முக்கொம்பு தடுப்பணைக்கு எப்பொழுது அடிக்கல் நாட்டுவீர்கள்?

இப்பொழுதுதான், விரிவான திட்ட அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது தயார் செய்யப்பட்ட பின்புதான், டெண்டர் விட்டு பிறகு அந்தப் பணி ஆரம்பிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x