

போலி மதுபானம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி., காந்திராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை முழுமையாக ஒழிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி., காந்திராஜன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திருவள்ளூர் எஸ்.பி., சரவணன், சென்னை மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, திருவள்ளூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி., காந்திராஜன், “திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் மதுவிலக்கு சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்பில் இயங்க வேண்டும். எரிசாராயம், போலி மற்றும் அண்டை மாநில மதுபானங்களை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், “தலைமறைவு குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவேண்டும். மதுவிலக்கு தொடர் குற்றவாளிகளை கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யவேண்டும். போலி மதுபானம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்போர், பிற மாநிலங்களில் இருந்து எரிசாராயம், மதுபானம் கடத்திவந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என்றார்.