

மத்திய அரசிடம் இருந்து உரிய உத்தரவுகள் பெறப்பட்டதும், கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு அனுமதி, ஒதுக்கீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தில் திருநங்கைகளுக்கான நலவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி சமர்ப்பித்த அறிக்கையில் கூறியதாவது:
திருநங்கைகளின் நலவாழ்வுக்காக தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பாராட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உடனடியாக முறையான அனுமதி மற்றும் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள கருத்துரு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து உரிய ஆணைகள் பெறப்பட்டதும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் வாழ்கிற, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிற 638 திருநங்கைகளில், 260 பேருக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கும் கருத்துரு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.