Published : 01 Aug 2018 05:03 PM
Last Updated : 01 Aug 2018 05:03 PM

காவேரி மருத்துவமனையில் தொண்டர்களிடம் கைவரிசை: இன்றும் ஒரு பிக்பாக்கெட் நபர் சிக்கினார்

 காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்களிடம் பிக்பாக்கெட் அடித்து 13 பேர் நேற்று கைதான நிலையில் இன்றும் ஒருவர் கையும் களவுமாக சிக்கினார். அவரைப் பிடித்த திமுக தொண்டர்கள், அடித்து உதைத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 5 நாட்களாக உடல் நலிவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்த வதந்தி பரவியதால் ஆயிரக்கணகான திமுக தொண்டர்கள் மருத்துவமனை அருகே குவிந்தனர்.

தினமும் மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதுதவிர ஊடகங்களின் செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர். மருத்துவமனை முன் திரண்டுள்ள தொண்டர்களோடு தொண்டர்களாக பிக்பாக்கெட் நபர்கள் திமுகவினர்போல் கரைவேட்டி கட்டிக்கொண்டு பிக்பாக்கெட் அடித்து வந்தனர்.

அதிக அளவில் பணம், செல்போன் திருட்டு புகார்கள் வந்ததன்பேரில் போலீஸார் தீவிரமாக கண்காணித்ததில் 13 பேர் கும்பல் சிக்கியது. இந்நிலையில் இத்தனை களேபரங்களுக்கிடையே மீண்டும் ஒரு பிக்பாக்கெட் நபர் இன்று சிக்கியுள்ளார். இன்று மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் தொண்டர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தக் கூட்டத்தில் நுழைந்த நபர் ஒருவர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி உணவுப்பொட்டலத்தை வாங்குவது போன்று திமுக தொண்டர் ஒருவரின் பர்சை பிக்பாக்கெட் அடிக்க முயன்றார். இதைப் பார்த்த தொண்டர் ஒருவர் அவரை கையும் களவுமாகப் பிடிக்க, அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரைப் பிடித்து அடித்து உதைத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x