Published : 16 Aug 2018 08:04 AM
Last Updated : 16 Aug 2018 08:04 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 3-வது முறையாக 142 அடியை எட்டியது பெரியாறு அணை: தமிழக அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்றாவது முறையாக 142 அடியை எட்டியது. விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு 12 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத் துக்கு 2,300 கனஅடி நீர் திறக்கப் படுகிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று முன் தினம் இரவிலும், நேற்று பகல் முழுவதிலும் பலத்த மழை கொட்டி யது. இதனால் நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 137.40 அடியைக் கடந்தது. நள்ளிரவிலேயே 140 அடியைத் தொட்டது. இதையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டதும், அதிகாலை 2 மணியள வில் கேரளப் பகுதிக்கு 9 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் திறக்கப்பட் டது. நேற்று காலை அணை 141 அடியைக் கடந்ததும் இரண்டாம் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. மழை தொடர்ந்ததால், நீர்வரத்தும் 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந் தது.

இதனால் கேரள பகுதிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதிகாலை திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6 மணிக்கே இடுக்கி அணையைச் சென்றடைந்தது. நேற்று மதியம் 12.50 மணிக்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அப்போது மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதுடன், இந்த தகவல் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட் டது.

இடுக்கி ஆட்சியர், தேனி ஆட்சிய ரைத் தொடர்புகொண்டு வெள்ளத்த டுப்பு நடவடிக்கை குறித்து விவா தித்தார். மதுரை பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் சுப்பிர மணியன் தலைமையிலான அதிகா ரிகள் அணைப்பகுதியிலேயே முகா மிட்டு கண்காணித்தனர்.

பெரியாறு அணை 142 அடியை தொட்டதால், இதற்கு மேல் தண்ணீரைத் தேக்க அனுமதி யில்லை என்பதால், வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தமிழக பகுதிக்கு மொத்தம் 2,300 கன அடி மட்டுமே எடுக்கப்படுகிறது. இரைச்சல் பாலம் வழியாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தனியாக கொண்டுவர முதலில் அதிகாரி்கள் திட்டமிட்டனர். ஆனால், தண்ணீர் வரும் பாதை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்ததால் குமுளி செல்லும் சாலைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதாலும், லோயர் கேம்ப் பகுதியில் ஆற்றில் மண்ணும், கற்களும் மேவி தண்ணீரின் போக்கை மாற்றிவிடும் ஆபத்து இருப்பதாக அதிகாரி்கள் கருதினர். இதனால் கூடுதல் தண் ணீரை வைகைக்குக் கொண்டு வரும் திட்டத்தைக் கைவிட்டனர்.

அதேநேரம் 142 அடிக்கும் மேல் தண்ணீரை தேக்க சட்டப்படி இயலாது என்பதால் உடனே தண்ணீரை இடுக்கி அணைக்கு திறந்துவிட்டனர். இந்த தண்ணீர் முழுவதும் பயன்படுத்த முடியாமல் அரபிக்கடலுக்குச் சென்றுவிடும். ஏற்கெனவே இடுக்கி அணை நிரம்பி, 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலை யில், பெரியாறு அணையின் வெள்ள மும் சேர்ந்துள்ளதால் செறுதோணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பெரியாறு அணை ஒரே நாளில் 6 அடி உயர்ந்து, 142 அடியை எட்டியதால் மத்திய நீர்வள ஆணையச் செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான மூவர் குழுவினர் நேற்று அணையைப் பார்வையிட்டனர்.

நேற்று காலை 8 மணி வரை அணைப் பகுதியில் 125.4 மிமீ, தேக்கடியில் 80 மிமீ மழை பெய்திருந்தது. நேற்று பகல் முழுவ தும் பலத்த மழை கொட்டியது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தால் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும், அதனை முழுமையாக இடுக்கிக்கே திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு மே 7-ம் தேதி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதித்தது. இதையடுத்து 2014 நவ.21, 2015 டிச.7 என 2 முறை அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இந்நிலையில், நேற்று 3-வது முறையாக 142 அடியை தொட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x