

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருவுருவ சப்பர பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 432-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் காலை திருயாத்திரை திருப்பலிகள், மாலையில் செபமாலை, மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.
கூட்டுத் திருப்பலி
தூய பனிமய மாதா பேராலய பெருவிழா தினமான செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். பகல் 12 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் பர்னாண்டோ தலைமையில் நன்றி திருப்பலி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ச.தே.செல்வராசு தலைமையில் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது.
திருவுருவ பவனி
இரவு 7 மணியளவில் அன்னையின் திருவுருவ பவனி தொடங்கியது. பேராலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதாவை நகர வீதிகளில் பவனியாக எடுத்து வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இரவில் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை லெரின் டீரோஸ், உதவி பங்குத்தந்தை டேவிட் வளன், அருட்சகோதர் ஜாய்னஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.