Published : 31 Aug 2018 12:26 PM
Last Updated : 31 Aug 2018 12:26 PM

பேருந்தில் பட்டாக்கத்தியுடன் பயணம்: ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக 5 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியைத் தீட்டி ரகளையில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 17 வயது மாணவர்கள் 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், யார் ரூட்டு தல என்ற கவுரவப் பிரச்சினையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் தொடர்ச்சியான சம்பவமாக நடைபெற்று வருகிறது.

'பஸ் டே' என்ற பெயரில் தங்களுக்குள் மோதிக்கொண்டதும், பேருந்தை ஜோடித்து அதன் மேல் ஏறி ஆட்டம் போடுவதும், சாலையில் ஊர்வலம் போல பேருந்தை மெதுவாகச் செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதும் சில ஆண்டுகளுக்கு முன் வரை அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தது.

இதை முறியடிக்கும் வகையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து 'பஸ் டே'வுக்குத் தடை வித்தனர். கல்லூரி மாணவர்கள், முதல்வர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன் பின்னரும் குறிப்பிட்ட ரூட்டில் கல்லூரிக்கு வரும் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும் அடிக்கடி நிகழ்வதுண்டு.

அவ்வாறு மோதிக்கொள்பவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டதுண்டு. அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்தி ஆயுதங்களுடன் உள்ள மாணவர்கள், முன்னாள் மாணவர்களைக் கைது செய்தது சமீபத்திய நிகழ்வு.

திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் பட்டரவாக்கம் அருகில் மாணவர்கள் ரயிலில் பயங்கர ஆயுதங்களுடன் சென்று சிக்கினர். இதுவரை இதுபோன்று ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்திய 33 மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை காரனோடையில் இருந்து பிராட்வேக்கு 57எப் மாநகரப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தில் ஏறிய பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீள பட்டாக்கத்தியுடன் பேருந்தின் முன், பின் படிக்கட்டுகளை ஆக்கிரமித்தனர். பயணிகளை உள்ளே செல்ல மிரட்டிய அவர்கள் பேருந்தில் தொங்கியபடி மாநிலக் கல்லூரிக்கு ஜே என்று கோஷமிட்டபடி வந்தனர்.

பயணிகள் சிலர் முணுமுணுத்தபோது மாணவர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர். பேருந்து நடத்துநர், ஓட்டுநரையும் மிரட்டிய அவர்கள் சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி சென்றனர். இதனால் சாலையில் சென்றவர்கள் அச்சத்தில் அந்தப் பேருந்து பக்கமே செல்லவில்லை.

ஆனால், மாணவர்கள் கத்தியுடன் பயணித்து, சாலையில் பட்டாக்கத்தியை தேய்த்தபடி சென்றதை துணிச்சலாக இருசக்கர பயணி ஒருவர் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சி வைரலாகப் பரவ, காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸார் காணொலிக் காட்சிப் பதிவுகளை வைத்து மாநிலக் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெற்குன்றத்தைச் சேர்ந்த மாநிலக் கல்லூரியில் படிக்கும் தமிழ் இளங்கலை முதலாமாண்டு மாணவர் ஆனந்தராஜ் (18) என்பவரைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள். 2-ம் ஆண்டு விலங்கியல் பயிலும் மாணவர், ஆட்டுப்பாக்கம் கிராமம் திருவள்ளூரை சேர்ந்த பிகாம்(சிஎஸ்) இரண்டாம் ஆண்டு மாணவர், மற்றும் இரண்டு முதலாமாண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x