Published : 21 Aug 2018 01:20 PM
Last Updated : 21 Aug 2018 01:20 PM

பிரியாணி கடையில் பாக்ஸிங் தாக்குதல்: தலைமறைவாக இருந்த யுவராஜ், திவாகர் நீதிமன்றத்தில் சரண்

கடந்த மாதம் பிரியாணி கடையில் வம்பிழுத்து பாக்ஸிங் ஸ்டைலில் தாக்குதல் நடத்தி பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ், திவாகர் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் பிரகாஷிடம் ஒரு கும்பல் வம்பிழுத்தது.

அவர்கள் அனைவரும் பிரியாணி கேட்டனர். அனைத்தும் முடிந்து கடையை மூடிவிட்டோம் என்று மேனேஜர் பிரகாஷ் கூறினார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், 'நாங்கள் யார் தெரியுமா? எங்களுக்கே இல்லை என்கிறாயா? தலைவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது கடை திறக்கிறாயா?' என்று கேட்டுத் தாக்கினர்.

அதில் பிரதானமாக இருந்த நபர் யுவராஜ் என்பவர் பாக்ஸிங் ஸ்டைலில் சரமாரியாக மேனேஜரைத் தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த சிசிடிவி காட்சி வைரலானது. அதில் தாக்கும் நபர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ் என்று தெரியவந்தது.

சிறிது காலம் இந்து அமைப்பு ஒன்றில் இருந்து கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்ட அவர் 2016-ல் திமுகவில் இணைந்தவர் கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

இந்தச் சம்பவத்தில் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக் (22), மணிகண்டன்(23) கிஷோர் (எ) குட்டி கிஷோர்(19), ராம்ஷோர் (எ) பெரிய கிஷோர் (23), சுரேஷ், (எ) சிலுவை சுரேஷ் (19), சதிஷ்குமார் (எ) சதிஷ் (23), ஆகிய 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரியாணி கடை தாக்குதல் விவகாரம் நெட்டிசன்களால் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இது மின்னல் வேகத்தில் இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் பரவியது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவிலிருந்து யுவராஜ், திவாகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையிலும், இந்த விவகாரத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்டாலின், தாக்குதலுக்குள்ளான ஹோட்டலுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் யுவராஜ், திவாகர் இருவரும் போலீஸில் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். போலீஸார் தங்களைத் தொடர்ந்து தேடி வருவதை அறிந்து அவர்கள் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x