

தமிழ்நாடு முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை புழுதிவாக் கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
“சென்னையில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த வும், விற்பனை செய்யவும் தமிழக அரசு அண்மையில் தடை விதித்தது. எனினும் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய பிளாஸ்டிக் பைகள், இப்போது ரூ.5 முதல் ரூ.10 வரை வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகால்களில் பிளாஸ்டிக் பைகள் அடைத்துக் கொள்வதால் வடிகால்களில் நீரோட்டம் தடுக்கப் பட்டு, சாலைகளில் கழிவு நீரும், மழை நீரும் பல இடங்களில் ஓடுகின்றன. பிளாஸ்டிக் பைகள் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாகி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நிலத்தடி நீர் பாதிப்பு
பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, சென்னை மாநகர மக்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் பல பிரச்சினைகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் வணிக நிறுவனங்களில் பிளாஸ் டிக் பைகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடுக்க எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வோரை கடுமையாகத் தண்டிக் கவும் நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அகிலா தனது மனுவில் கோரியுள்ளார்.
அரசின் பதில் மனு இல்லை
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் அரசின் பதில் மனு இல்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிரான தடை பற்றிய சட்ட ரீதியான நிலைமை, அந்த தடையை அமல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற விவரங்களுடன் அரசுத் தரப்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.