Published : 17 Aug 2018 08:53 PM
Last Updated : 17 Aug 2018 08:53 PM

சென்னையில் இம்தாத் இந்தியா அமைப்பு தொடக்கம்

'இந்தியா–2047' திட்டத்தின் ஒரு பகுதியாக 'இம்தாத் இந்தியா' என்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் சேவை மையங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு சென்னையில் அபு பேலஸ் நிகழ்ச்சி அரங்கில் கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது.

72-வது சுதந்திர தினத்தை தேசம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய வேளையில், முஸ்லிம் சமூகத்தை சக்திப்படுத்துதல் மற்றும் சமூக மேம்பாட்டின் ஒரு பகுதியாக 'எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன்' அறிமுகப்படுத்திய இத்திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா தொடங்கி வைத்தார்.

எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் தலைவர் இ.எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அனிஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் முஹம்மது ராஃபி‘இந்தியா-2047’திட்டத்தின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கும் முன்னோடி திட்டப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் விளக்கினார்.

மக்கள் தொடர்பு தலைமை அலுவலர் அஹமது குட்டி 'இம்தாத் இந்தியா' திட்டத்தின் நோக்கங்களை காணொலிக் காட்சி மூலம் விளக்கிப் பேசினார்.

எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துச் செல்லும் ‘இந்தியா-2047’ திட்டத்தின் ஒரு பகுதியாக 'இம்தாத் இந்தியா' என்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கான அரசின் நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது, அனைத்து குடிமக்களும் அரசின் பல்வேறு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை பெறுவதை உறுதி செய்வது, அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு உதவுவது 'இம்தாத் இந்தியா' நெட்வொர்க்கின் நோக்கம்.

மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைக்கும் கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குவது, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்குவது, தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்வது மற்றும் விண்ணப்பிக்க உதவுவது, தகுதியுடைய அனைத்து மாணவர்களும் கல்வி உதவித்தொகையைப் பெறுவதை உறுதி செய்வது ஆகியன 'இம்தாத் இந்தியா' நெட்வொர்க்கின் நோக்கங்களில் முக்கியமானவை.

எதிர்வரும் 10 வருடங்களில், ஒட்டுமொத்த சமூகத்தில் தகுதியுடைய அனைவரும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்தந்தப் பகுதிகளில் அரசின் அனைத்து விதமான நலத்திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறிட வேண்டும்; அனைவரும் கல்வி பெற வேண்டும்; வேலை வாய்ப்பின்மை குறைய வேண்டும்; அரசு நலத்திட்டங்களின் மூலம் பயன்பெறுதல் ஆகிய மேற்கண்ட இந்த முயற்சியின் மூலம் வறுமை ஒழிய வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ‘இந்தியா-2047’ திட்ட ஆவணத்தின் இரண்டாம் பதிப்பை சீதக்காதி என்.ஜி.ஓ அறக்கட்டளையின் தலைவர் குர்ரத் வெளியிட, போபாலைச் சேர்ந்த பிரபல பத்தரிகையாளர் பர்வேஸ் பாரி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x