Published : 13 Aug 2018 04:54 PM
Last Updated : 13 Aug 2018 04:54 PM

நான் தலைவராக வந்துவிடுவேன் என்று பயப்படுகிறார்கள்: அழகிரி பேட்டி

திமுகவில் எனக்கு இருக்கும் செல்வாக்கில் நான் கட்சிக்குள் வந்தால் தலைவராகிவிடுவேனோ என்று பயப்படுகிறார்கள் என தனியார் ஆங்கிலத்  தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் அழகிரி அளித்த பேட்டி காரணமாக திமுகவுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் விரிவாகப் பேசியுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:

உங்கள் ஆதங்கத்திற்கு என்ன காரணம்?

பல ஆதங்கங்கள் இருக்கு.  அதையெல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்.

நீங்கள் மறுபடியும் கட்சியில் இணைந்து செயல்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களா?

நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார் அல்லவா? திமுகவில் செய்தித்தொடர்பாளர்கள் யாரும் டிவி சேனலில் பேட்டி அளிக்கக்கூடாது என்று படித்தேன். அப்புறம் அதற்கு என்ன அர்த்தம், பிறகுஎப்படி என்னைக் கட்சியில் இழுப்பார்கள்.

திமுக தலைவர் மறைந்துள்ள நிலையில் இதுபோன்ற நிலையை அவர்கள் எடுப்பது சரியா?

அவர்களைக் கேளுங்கள். ஏற்கெனவே கூறியுள்ளேன். 6 மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும் ரஜினியிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தோற்றால் கட்சி சின்னாபின்னமாகிவிடும்.

பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசத் தயாரா?

அதெல்லாம் அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும்.  அந்த நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன? ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டுப் பேசுவீர்களா?

கண்டிப்பாக என் ஆதரவாளர்களிடம் எப்போதும் நான் பேசுவேன். தற்போது ஒன்றும் ஆக்டிவா இருக்கமாட்டோம். நேரம் வரும்போது காலம் பதில் சொல்லும் என்று சொன்னேன் அல்லவா? காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக. தலைவரே தண்டிப்பார் இவர்களை. தலைவரின் ஆத்மா இவர்களைச் சும்மா விடாது.

கட்சியில் உங்களை இணைக்கமாட்டேன் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கென்ன தெரியும். எனக்குப் புகழ் இருக்கிறது, கட்சித் தொண்டர்கள்விரும்புகிறார்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால் தலைவராகிவிடுவேன் என்ற எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் அல்லது மற்றவர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. யாரும் நான் கட்சியில் வருவது பற்றி பேசியதில்லை.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் திமுக சரியாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

சரியாகச் செயல்பட்டால் எப்படி டெபாசிட் போகும். என்ன கேள்வி இது.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கட்சிக்கு மேலும் சில பின்னடைவு என்பது உங்கள் ஆதங்கமா?

ஆமாம். வரிசையாகத் தோற்கிறார்கள், கட்சிக்காரன் காசு வாங்கிட்டான் என்று முதன்மைச் செயலாளரே பேசுகிறார். கட்சிக்காரன் காசு வாங்கியதால்தான் தோற்றுப் போய்விட்டேன் என்கிறார்.

கட்சிக்காரன் அவன் தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான், கட்சிக்காக எவ்வளவு உழைத்திருப்பான். அண்ணா காலத்திலிருந்து உழைத்து வருகிறான் இதைக்கேட்டு எப்படி எடுத்துக்கொள்வான் சொல்லுங்கள்?, இதெல்லாம்தான் என் ஆதங்கம்.

அதுவுமில்லாமல் காசு வாங்கிக்கொண்டு பதவி கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு செயலாளர் இருந்தால் ஒரு துணைச்செயலாளர் இருப்பார். இப்போது பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள்.

இவ்வாறு அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x