Published : 31 Aug 2018 07:23 PM
Last Updated : 31 Aug 2018 07:23 PM

கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டிலேயே துறந்தேன்: மாநிலக் கல்லூரி மாணவர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு

 விரும்பாத பாடத்தை எடுத்ததால் அதை முதலாமாண்டிலேயே துறந்த நான் அவமானம் காரணமாக தீவிரமாகப் படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வானேன் என்று மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.

சென்னையில் பேருந்தில் கத்தியைத் தீட்டியபடி சென்ற மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைதானார்கள்.

இதையொட்டி மாநிலக் கல்லூரியில் இன்று காலை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாணவர்களிடையே பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“எனது குடும்பம் போலீஸ் குடும்பம், 1982-க்குப் பிறகு இங்கு வருகிறேன். கிராமத்திலிருந்துதான் சென்னைக்கு வந்தேன்.முதலில் பிரமிப்பாக இருந்தது. பின்னர் அது பழகிப்போனது. 1982-ம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன், அதன் பின்னர் எனக்கு விருப்பமில்லாததால் படிப்பை முதல் ஆண்டிலேயே விட்டுவிட்டேன். முதல்வர் கூறியதுபோல் ஐபிஎஸ் படிக்கும் வெறியோடு நான் இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறவில்லை.

நியாயப்படி பார்த்தால் படிப்பு வரவில்லை, இந்தக் கல்லூரியில் நன்றாக சொல்லிக்கொடுத்தும் எனக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வமில்லை என்பதால் படிப்பைத் தொடர விருப்பம் இல்லை. பின்னர் வெளியேறினேன். ஓர் ஆண்டு வீணாகப் போனது. ஆனாலும் ஏதாவது ஒரு டிகிரி படிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், எனது தந்தையின் நண்பரின் உதவியால் பிஏ வரலாறு எடுத்துப் படித்தேன்.

பல அவமானங்களை அன்று சந்தித்தேன். ஹிஸ்டரி எடுத்தால் எதிர்காலமே இருக்காதே என்று அனைவரும் கேட்க ஆரம்பித்தனர். ஒருவருடம் டிஸ்கன்டினியூ செய்ததால் கேவலமாகப் பேசினர். அதுவே ஒரு வெறியைக் கொடுத்தது. அதைத் தவிர்க்க அவமானப்படாமல் இருக்க ஐபிஎஸ் படிக்கத்தான் ஹிஸ்டரி குரூப் சேர்ந்தேன் என்று எல்லோரிடமும் காரணமாகச் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

ஏன் விட்டுவிட்டு வந்தேன் என்பதற்காக காரணம் சொல்லி அதுவே ஒரு வெறியாக மாறிவிட்டது. அது ஒரு ஆர்வமாக மாறி டெல்லி போய் சேர்ந்தேன். சாதாரண சராசரி மாணவனாக பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்த நான், 1990-ல் தமிழகத்திலேயே முதல் மாணவனாக யூபிஎஸ்சியில் தேர்வானேன்.

அப்போது எனக்கு ஐஏஎஸ்ஸும் தெரியாது, எந்த சர்வீஸ் பற்றியும் தெரியாது. போலீஸையே பார்த்து வந்ததால் என்னுடைய ஒரே குறிக்கோள் ஐபிஎஸ் சேரணும் என்பதே. அதனால் ஐபிஎஸ்ஸும் கிடைத்தது, தமிழ்நாடு கேடரும் கிடைத்தது. அது ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான். அது ஒரு பெரிய கடினமான பணி.

அவமானத்துடன் தான் டெல்லி வந்தேன். திரும்பி வரும்போது வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்பதால், கடுமையாகப் படித்தேன்.

மூன்று ஆண்டு முயற்சியில் முதல் முயற்சி நேர்காணல் வரை சென்றும் கிடைக்கவில்லை. அடுத்த முயற்சியில் கிடைத்தது. அதன் பின்னர் எனக்குப் பிடித்த படிப்பு வரலாறு, எனக்குப் பிடித்த பணி காவல் பணி.

இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் உங்களுக்கு என்ன ஆர்வம் இருக்கிறதோ அதைப் படியுங்கள், எதைப் படித்தாலும் அதில் தனி ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எது உங்களை அதிகம் கவருகிறதோ அதில் அதிகம் பயிற்சி எடுங்கள், ஈடுபாடு காட்டுங்கள். அதில்தான் நீங்கள் முன்னுக்கு வரமுடியும். வரலாற்றில் நாம் அதிகம் என்ன படிப்போம். மரம் நட்டார், போர் செய்தார், குளம் வெட்டினார் என்றுதான் படித்திருப்போம். ஆனால் நான் வரலாற்றில் படித்தது மனித செயல்பாடுகளை குறித்துத்தான் படித்தேன்.

சரித்திர காலகட்டத்தைப் படித்தால் எந்தக் காலத்திலும் மனித செயல்பாடுகள் மாறியதே கிடையாது. மனித நடத்தை ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளது. அதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். பிஸ்மார்க் என்ன சொல்கிறார் என்றால் “முட்டாள்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள், ஆனால் புத்திசாலிகள் அடுத்தவர்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்கிறார்.

அக்பரிடம் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்றால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு. அவர் இங்கு வந்தார், பல போரில் வெற்றி பெற்றார், பல நாடுகளைக் கைப்பற்றினார். ஆனால் மஹாராணா பிரதாப் என்கிற ராஜபுத்திர மன்னனை மட்டும் அவர் இறக்கும்வரை அவர் ஆட்சி செய்த நாட்டைக் கைப்பற்ற முடியவில்லை.

அவரது மரணத்துக்குப் பின்தான் அவரால் அவர்கள் நாட்டைக் கைப்பற்ற முடிந்தது. அப்போது அவர் என்ன செய்தார் என்றால் நீங்கள் என்னுடன் சேர்ந்துகொள்ளுங்கள் உங்கள் நாட்டை நீங்கள் விரும்பும்படி ஆட்சி செய்துகொள்ளலாம், நான் உங்களை தொல்லைப்படுத்த மாட்டேன், ஆனால் நீங்கள் எனது தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது அந்தக் காலத்தில் சிறந்த அருமையான நடைமுறையாக இருந்தது. அக்பருக்காக அடுத்த ராஜபுத்திர மன்னர்களுடன் ராஜபுத்திர மன்னர்களே சென்று போரிடும் நிலை இருந்தது. இது நல்ல ஆளுமைத்திறன். அதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம்.

அடுத்து எதிரிகளுக்கும் நண்பனாக இருப்பது. போரஸ் மன்னனை வெற்றிகொண்ட அலெக்ஸாண்டர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டபோது என்னை ஒரு மன்னனுக்குரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை மதித்து அவரிடமே தாம் வென்ற நாட்டை ஒப்படைத்துச் சென்றார் அலெக்ஸாண்டர் என்பதைப் படித்தோம்.

எதிரிக்கும் யாரையும் எந்த வகையிலும் அவமானப்படுத்தக்கூடாது. அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நம்மை அடிபணிந்து வந்தாலும் அவரை அவமானப்படுத்தக்கூடாது, அவர்களை நல்ல வகையில் நடத்த வேண்டும் என்று படித்துத் தெரிந்துகொண்டேன். இவ்வாறு மனிதப் பண்புகள் பல விதங்களில் நமக்கு சரித்திரப் பாடத்திலிருந்து கிடைத்தது.

நீங்கள் எதைப் படிக்கிறீர்களோ அதை ஆர்வத்துடன் படித்தீர்களானால் நல்ல எதிர்காலம் இருக்கிறது, வாய்ப்பு இருக்கிறது. மாணவப் பருவத்தில் உங்கள் ஆற்றல் நல்ல முறையில் பயன்பட வேண்டும். ஓராண்டு கல்லூரிப் படிப்பு தடைபட்டபோது எதையும் செய்யவில்லை என சிறிய குற்ற உணர்வு ஏற்பட்டது.

அப்போது உடலைத் தேற்ற உடற்பயிற்சி, ரன்னிங் சென்றேன், டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் கல்லூரியில் வரலாறு படிக்கும்போது மேடைப்பேச்சு குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

ஐபிஎஸ் பயிற்சியில் ஒரு அங்கமாக இத்தாலியில் எங்கள் குழு சென்றபோது ஒரு அசைன்மென்ட் முடித்தபோது அதை அறிக்கையாக அடிக்க வேண்டும், யாருக்கும் டைப் செய்யத் தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் நான் கற்ற டைப்ரைட்டிங் உதவியது. அதன் மூலம் எங்கள் ப்ராஜக்டை முடித்து இந்திய அணி முன்னிலை பெற முடிந்தது.

இன்னொருமுறை பயிற்சியில் 7 நபர்களை நிறுத்தி அவரில் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும், பின் அவரை ஏன் தேர்வு செய்தோம் என்பதைப் பேச வேண்டும். ஏழுபேரில் பலரையும் பலரும் தேர்வு செய்ய, நான் தேர்வு செய்த நபரை என்னைத் தவிர யாரும் தேர்வு செய்யாததால் படபடப்பு உண்டானது.

ஆனால் கல்லூரியில் பேச்சுப்பயிற்சியில் நான் பெற்ற பயிற்சி அவரை ஏன் தலைவராக நான் தேர்வு செய்தேன் என்று பேசி முதல் பரிசையும் பெற்றேன். கல்லூரியில் என்சிசி, என்.எஸ்.எஸ்சில் இருந்தேன். ஏற்கெனவே பிஎல் முடித்திருந்த நான் எம்.எல் முடித்தேன். பின்னர் பிஎச்டி எம்.எல் மெர்கண்டைல் சட்டம், பிஎச்டி கிரிமினல் சட்டம் என இரண்டு பிஎச்டி முடித்துவிட்டேன்.

வாழ்க்கையில் கட்டாயம் நாம் நம்மை உயர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். இதை உங்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன். அதே போன்று அடுத்தவருக்கு உதவ வேண்டும். கஷ்டப்படுகிறவர்களை தேடிப்போய் உதவ வேண்டும். அப்படிச் செய்யும் உதவியில் எதையும் எதிர்பார்க்கக்கூடாது.”

இவ்வாறு காவல் ஆணையர்  விஸ்வநாதன் பேசினார்.

பின்னர் மாணவர்கள் அவரிடம் கைகுலுக்கி வாழ்த்து பெற்றனர். அனைவரிடமும் கைகுலுக்கிப் பேசிய காவல் ஆணையருடன் சில மாணவர்கள் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

போலீஸார் மாணவர்கள் அனைவரிடமும் போலீஸாக நடந்துகொள்வதைத் தவிர்க்கும் வகையில் சில மாணவர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த கல்லூரிக்கும் கெட்டப்பெயர் வரக்கூடாது என்பதற்காக நேரில் வந்து பேசிய காவல் ஆணையரை அனைவரும் பாராட்டினர்.

மாணவர்களுக்கு நேரடியாக அறிவுரை கூறும் விதத்தில் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லி போராடும் குணம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக உணர்த்திய காவல் ஆணையருக்கு மாணவர்களும், கல்லூரி முதல்வர், பேராசிரியர்களும் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x