Published : 07 Aug 2014 10:17 AM
Last Updated : 07 Aug 2014 10:17 AM

நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினால் தடியடி: மார்க்சிஸ்ட் உறுப்பினர்களுக்கு முதல்வர் பதில்

நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதால்தான் போலீசார் தடியடி நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா காட்டமாக பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக வும், போலீஸார் சில வழக்குகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.

அப்போது முதல்வர் ஜெய லலிதா குறுக்கிட்டுப் பேசியதாவது:-

தமிழக காவல்துறையினர் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக மேற்கொண்டு வருகின்றனர். சில வழக்குகளில் சில காரணங்களால் விசாரணை தாமதமாகலாம். ஆனால், அதற்காக வழக்கை துரிதமாக முடிக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது.

பொது அமைதியை காப்பதிலும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் தமிழக போலீஸார் சிறப்பாக செயல்படுகின்றனர். ஒரு மாநிலத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அம்மாநில மக்கள்தொகை அடிப்படையில் விகிதாச்சார முறையில் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் குற்றங்கள் குறைவு.

காதலர்கள் பொய் புகார்

பணியிடத்தில் பெண்களுக் கெதிரான பாலியல் பலாத்காரம் பற்றியும் உறுப்பினர் பேசினார். பெண்களுக்கெதிரான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வகுக்கப்பட்ட விசாகா குழு நெறிமுறைகள்படி அரசு அலுவலகங்களில், பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவினர், புகார்களை விசாரித்து உரிய அதிகாரிகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கின்றனர்.

பெண்களுக்கெதிரான குற்றங் கள் அதிகரித்திருப்பதாக உறுப் பினர் கூறினார். இப்போதெல் லாம் காவல்நிலையங்களுக்குப் பெண்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்கிறார்கள். அதனால் அதிக புகார்கள் வருகின்றன. அதற்காக, பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது.

பாலியல் புகார் வழக்குகளில் பெரும்பாலானவை காதலர்களின் பெற்றோர்கள் தரும் புகார்களாகவே உள்ளன. இரு பாலினர் காதலித்து சில காரணங்களினால் பிரிந்துவிடும் நேரத்தில், சில பெண்களும் பாலியல் புகார் கூறுகிறார்கள். விசாரணைக்குப் பிறகு, அவை பாலியல் வழக்குகள் அல்ல என்று நீதிமன்றம் கூறிவிடும். வழக்கு விசாரணை தாமதம் என்பதைப் பொருத்த வரையில் பல வழக்குகள், நீதிமன்றத்தில் தாமதமாகின்றன. அதற்கு அரசு என்ன செய்யும்?

மார்க்சிஸ்ட் வெளிநடப்பு

பாலகிருஷ்ணன்:

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதி கரித்து வருகின்றன. அரசியல் ரீதியிலான போராட்டங்களின்போது போலீஸார் தடியடி நடத்துகிறார்கள். திண்டுக்கல்லில் பாலபாரதி மற்றும் அண்ணாதுரை ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடத்திய பேரணியில் கூட தடியடி நடத்தப்பட்டது.

முதல்வர்:

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின்போது போலீஸார் அவ்வாறு செயல்பட மாட்டார்கள். பாலபாரதி பற்றி கூறி னீர்கள். போக்குவரத்துக்கு இடையூ றாக நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினால்தான் தடியடி நடத்துவார்கள் என்றார்.

அப்போது பாலபாரதி எழுந்து ஏதோ கூறமுயன்றார். பிறகு வாய்ப்பு தருவதாக பேரவைத் தலைவர் கூறியதைத் தொடர்ந்து, அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்ளே வந்தனர். முதல்வர் பதிலுரை முடிந்தபிறகு, பாலபாரதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்கிறார்கள். அதனால் அதிக புகார்கள் வருகின்றன. அதற்காக, பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x