Published : 18 Aug 2018 12:29 PM
Last Updated : 18 Aug 2018 12:29 PM

ராயப்பேட்டையில் தியான மடத்தில் பெண் நிர்வாகிக்கு வெட்டு: ஆசிரமத்திலிருந்து நீக்கப்பட்டவர் கைது

ராயப்பேட்டையில் பிரம்ம குமாரிகள் சங்க பெண் நிர்வாகியை வெட்டிய முன்னாள் சீடரை போலீஸார் கைது செய்தனர். காயம்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் பிரம்மகுமாரிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கானோருக்கு யோகம், தியானம் கற்றுத் தரப்படுகிறது. ஏராளமானோர் சீடர்களாக அமைப்பில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 40 வயது மதிக்கத்தக்க நபர் கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த நிர்வாகி ரஞ்சனிக்கும் (43) அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நபர் ஏற்கெனவே தான் தயாராக மறைத்து எடுத்து வந்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் ரஞ்சனியின் தலையிலும் முதுகிலும் வெட்டினார்.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ரஞ்சனி அலறினார். தலையிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையிலிருந்த அவரை உடனிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஞ்சனியைக் கத்தியால் குத்திய நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு ராயப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மணிவண்ணன் (41) என்பதும் நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தியானப் பயிற்சி பெற்றவர் என்பதும், அவரது செயல்பாடு சரியில்லாததால் ஆசிரமத்திலிருந்து அவரை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர் கத்தி ஒன்றை வாங்கிக்கொண்டு தகராறு செய்யும் நோக்கோடு பிரம்ம குமாரிகள் சங்க அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x