Published : 06 Aug 2018 04:29 PM
Last Updated : 06 Aug 2018 04:29 PM

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புரிமையைப் பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்: திருமாவளவன்

 காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் படி சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி அம்மாநிலத்தில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என்ற அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் உறுப்பு 35-ஏ உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது உறுப்பு 35ஏ-ஐ ரத்து செய்ய பாஜக ஆதரவு அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

முத்தலாக் பிரச்சினையில் கையாண்ட உத்தியையே பயன்படுத்தி காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை நீதிமன்றத்தின் மூலமாக பறிப்பதற்கு செய்யப்படும் முயற்சியோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மத்திய அரசு இதில் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். காஷ்மீரின் சிறப்புரிமையைப் பாதுகாப்போம் என்று அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் குடியுரிமை பற்றிய சிறப்பு அதிகாரம் நாகாலாந்து, மிசோரம் முதலான மாநிலங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களுக்கும் அதற்கு முன்பே அங்கே இருப்பவர்களுக்கும் இடையில் வேறுபட்ட மதிப்பை அளிக்கும் நிலை புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளது. வழக்கு தொடுத்தவர்கள் அதையெல்லாம் எதிர்க்காமல் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை மட்டும் எதிர்ப்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையே காட்டுகிறது.

அசாமில் சுமார் 40 லட்சம் பேரின் குடியுரிமையைப் பறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்திலும் பதற்றத்தை உண்டாகும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக எந்த நிலையையும் எடுக்கக் கூடாது. அந்த அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x