

தமிழகத்தில் மேடைகளில் கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்த கலைக்குழுக்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால், இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் கலைஞர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலும் விழாக்காலங்களின் போது மேடையில் கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் ஆபாச நடன நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருவதாக வந்த புகாரைத் தொடர்ந்து மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் பொறுப்பை காவல் துறையிடம், சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்தமாக மேடை நடன மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதை காவல் துறை நிறுத்திவிட்டது. இதனால் இதை நம்பியிருக்கும் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இத் துறையில் உள்ள கலைஞர்கள் கூறுகின்றனர்.
“ஆபாச நடனங்கள் ஆடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் இத்தொழிலை நம்பி இருக்கும் நல்ல கலைஞர்களையும் பாதிக்கும் விதமாக காவல் துறை செயல்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பல கலைஞர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்கிறார் தமிழ்நாடு மேடை நடன கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பிரேம்நாத்.
மறைந்த நடிகர்களைப் போல் வேடமிட்டு கடந்த 30 ஆண்டுகளாக மேடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திவரும் ரூபன் இதுபற்றி கூறும்போது, “ மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் என்னுடைய குடும்பத்திற்கு ஒரு வேளை உணவுகூட கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.
“என்னுடைய அப்பாவுக்கு இரண்டு கால்கள் இல்லை. என் குடும்பத்தை நடத்த ஆடி மாத மேடை நிகழ்ச்சிகளை நம்பி இருந்தேன். நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படு கிறோம். கடந்த 15 நாட்களாக மோர் சாதம் மட்டும்தான் எங்கள் வீட்டின் உணவாக இருக்கிறது '' என்கிறார் மற்றொரு கலைஞரான கல்பனா.
மேடை கலைஞர்கள் அரசின் எந்த தொழிலாளிகள் நலவாரியத்திலும் உறுப்பினர்களாக இல்லை. இதனால் மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, விபத்து காப்பீடு போன்றவை அவர்களுக்கு கிடைப்பதில்லை.
“சமீபத்தில் சென்னை ஆலந்தூர் பகுதியில் நடந்த மேடை நிகழ்ச்சியில் ஒரு பாடகர் மைக்கில் மின்சாரம் பாய்ந்து பலியானார் அரசின் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டிருந்தால் அவரது குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு சேர்க்கப்படாததால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேடை கலைஞர்களையும் நலவாரியங் களில் சேர்க்க வேண்டும். மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்கிறார் மேடை நடன கலைஞர் ரேவதி.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இக்கலைஞர்கள் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இத்துறையில் உள்ள கலைஞர் களைக் காக்க மேடை நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க வேண்டும், நலிவுற்ற நிலையில் உள்ள மேடை நடன கலைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பதே இதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக் கானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.