‘அண்ணா, நீ இருக்கும் இடம் தேடி நான் வருகையில்...’

‘அண்ணா, நீ இருக்கும் இடம் தேடி நான் வருகையில்...’
Updated on
2 min read

திமுகவில் எவர் ஒருவரைவிடவும் கருணாநிதியின் உழைப்பை அறிந்தவர், அங்கீகரித்தவர் அறிஞர் அண்ணா. “ஒருநாளைக்கு கருணாநிதி எத்தனை மணிநேரம் தூங்குகிறார் என்று அவருக்குத் தெரியாமல் பார்க்க வேண்டும்”, “தண்டவாளத்தில் தலை வைத்துப்படு என்றாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாய் கருதுபவன் என் தம்பி கருணாநிதி” என்று கருணாநிதியை உச்சி முகர்ந்து பாராட்டியவர் அண்ணா. எல்லாவற்றுக்கும் மேலாக, “தமிழ்நாட்டின் பாதிச்சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” என்று சொன்னதுதான் கருணாநிதிக்கு அவர் அளித்த மிகப்பெரிய அங்கீகாரம்.

1969 பிப்ரவரி 3ம் நாள் அந்த அண்ணாவின் மரணம், கலைஞரை கலங்கடித்தது. அந்த நேரத்திலும், அண்ணாவின் உடலுக்கும், புகழுக்கும் மிகப்பெரும் அரசு மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி. கடற்கரைக்குப் பதில் வேறு இடம் பார்க்லாமே என்ற சகதோழர்களிடம் உறுதியாக வாதாடியவர் கலைஞர். 

உலகின் இரண்டாவது நீண்ட அழகிய கடற்கரை சென்னை மெரினா. சென்னைவாசிகளை மட்டுமல்ல, தலைநகர் வரும் அத்தனை சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிற இடம். ஏழை, பணக்காரர் என்று எல்லோரும் சென்னையில் -முதலில் பார்க்கவிரும்புகிற அந்த கடற்கரையில்தான், இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவரின் நினைவிடம் அமைய வேண்டும் என்ற அவரின் உறுதி வென்றது. அண்ணாவின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

பிறகு முதல்வரான கலைஞர், அண்ணாவின் நினைவிடத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினார். சமாதி மீது, “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” என்ற வாக்கியத்தைப் பொறிக்கச் செய்தார். யானை தந்தங்கள் வடிவிலான அழகான வளைவும் அமைக்கப்பட்டது. சமாதியைச் சுற்றியிலும், அவரது பொன்மொழிகள் புத்தக வடிவிலான கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டன. அணையா விளக்கு ஒன்றையும் ஏற்றிவைத்தார் கலைஞர்.

அடுத்து வந்த நினைவு நாளில், அண்ணாவின் நினைவுகள் அழுத்த கண்ணீரோடு உட்கார்ந்து அவர் பேனா பிடிக்க, உள்ளத்து உணர்ச்சி எல்லாம் பேனாவின் ரத்தமாகி, காகிதத்தை நிறைத்தது.

“இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?” என்று எழுதியபோது கையை வியர்வையும் காகிதத்தைக் கண்ணீரும் நனைத்திருந்தது.

உணர்விழந்த நிலையிலும் அண்ணா புகைப்படத்தைப் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு, அண்ணா சமாதியில் இடமில்லை என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. தன் வாழ்க்கையே ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்த கலைஞர், அண்ணனுக்கு அருகில் துயில் கொள்ளும் உரிமையையும் போராடிப் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், கலைஞர் மு.கருணாநிதி எழுதிய அந்தக் கவிதாஞ்சலியின் இறுதிப் பகுதியை மறு பிரசுரம் செய்கிறோம்.

‘‘பத்துச் சிலை வைத்ததினால் - அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் - அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in