

நெய்வேலி அருகே காதல் மணம் புரிந்த மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி உயர் மின் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸார் சமாதானம் செய்து கீழே இறக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியை அடுத்த மேலக்குப்பத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவக்குமார் (25). இவர் வசிக்கும் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் அருள் லட்சுமியை (20) 2 ஆண்டுகளாக சிவக்குமார் காதலித்துள்ளார். இருவரும் வீட்டாருக்கு தெரியாமல் கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர், இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், மகளுக்கு பதிவுத் திரு
மணமான விஷயத்தை அறிந்த அருள் லட்சுமியின் பெற்றோர், அவரை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். இதனால், மனைவியை காணாமல் நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் போலீஸார் எடுக்காததால், நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நீதிமன்றத்தை அணுகினார். தனது மனைவியைக் கண்டு பிடித்து தரக்கோரி நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்திற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார். இதையடுத்து நெய்வேலி தெர்மல் போலீஸார் அருள் லட்சுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், சிவக்குமார் திடீரென செவ்வாய்க்கிழமை அதி
காலை 4 மணிக்கு தனது வீட்டருகே முந்திரி தோப்பில் உள்ள என்எல்சி 2-ம் அனல் மின் நிலையத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் உயர் மின் அழுத்த மின் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றார்.
தகவலறிந்த கிராம மக்கள், அவரை கீழே இறங்குமாறு அழைத்தபோது, ‘தனது மனைவியை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைத்தால் தான் கீழே இறங்குவதாக’ சிவக்குமார் கூறி விட்டார். உடனே, நெய்வேலி தெர்மல் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் காலை 9 மணி அளவில் சிவக்குமாரை கீழே இறங்கச் செய்தனர்.
இதையடுத்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்துக்கு சிவக்குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு விசாரணைக்காக கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். உயர்மின் அழுத்த மின் கோபுரத்தில் சிவக்குமார் ஏறியதைத் தொடர்ந்து, என்எல்சி 2-ம் அனல் மின்நிலைய நிர்வாகத்தினரும், கிராம மக்களும் பெரும் பரபரப்புக்கு ஆளானார்கள்.