

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த ‘காவிரி’என்ற குட்டி யானை உயிரிழந்தது.
கடந்த 2011-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நம்பிக்குன்னா பகுதியில், பிறந்து 10 நாட்களேயான குட்டி யானை தாயை பிரிந்து வாடியது. இதை வனத் துறையினர் மீட்டு, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரித்து வந்தனர்.
கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்று, அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு ஊட்டி மகிழ்ந்தார். மேலும், வனத் துறையினரின் பராமரிப்பில் இருந்த குட்டி யானைக்கு ‘காவிரி’ என பெயரிட்டார். அப்போது ‘காவிரி’ திமிறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ‘காவிரி’ குட்டி யானைக்கு திங்கள்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தது. 3 ஆண்டுகளாக ‘காவிரி’-யை பராமரித்து வந்த வனத்துறையினரும், பழங்குடியினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.