படகிலிருந்து நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன?: தேடும் பணி தீவிரம்

படகிலிருந்து நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன?: தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

பழவேற்காடு அருகே படகிலிருந்து நடுக்கடலில் தவறிவிழுந்த மீனவரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியை ஒட்டி யுள்ளது, வங்காள விரிகுடா கடலின் முகத்துவாரம். இந்த முகத்துவாரம் வழியாக பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பழவேற்காடு, லைட் ஹவுஸ் நடுகுப்பம், கூனங்குப்பம், சாத்தான்குப்பம், அரங்கன் குப்பம், கோட்டைக்குப்பம், சம்பாசபள்ளி குப்பம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் படகுகள் மூலம் மீன்பிடித்துவருகின்றனர்.

அந்தவகையில், சனிக்கிழமை காலை, பழவேற்காடு ஒட்டியுள்ள சம்பாசபள்ளி குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணி, தேசப்பன், எத்திராஜ் உள்ளிட்டவர்கள், கோட்டைக்குப்பத்தைச் சேர்ந்த வடிவேல்(43), மகேஷ் என 20 பேர், 6 பைபர் படகுகளில், பழவேற்காடு அருகே கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். இதில், வடிவேல், மகேஷ் ஆகிய இருவர் ஒரு பைபர் படகில் சென்றனர். படகு நடுக்கடலில் சென்றபோது, கோட்டைக்குப்பத்தைச் சேர்ந்த வடிவேல், படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். இதையடுத்து, வடிவேலுவைத் தேடும் பணியை மீன் வளத் துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி, கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சம்பாசபள்ளி குப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 20- க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தேடி வரு கின்றனர்.

வடிவேலுக்கு மனைவி மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட இரு பெண், இரு ஆண் என 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in