Published : 01 Aug 2018 07:37 PM
Last Updated : 01 Aug 2018 07:37 PM

அகில இந்திய அளவில் டிரெண்டான பிரியாணி கடை தாக்குதல்: தொண்டரணி யுவராஜ், திவாகர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்

பிரியாணி கடையில் பாக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்திய விவகாரம் அகில இந்திய அளவில் டிரெண்டாகிவிட்டது. காலையிலிருந்து இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதாகவே இதில் சம்பந்தப்பட்ட யுவராஜ் மற்றும் திவாகரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை  அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தா மேனேஜர் பிரகாஷிடம் ஒரு கும்பல் வம்பிழுத்தது.

அவர்கள் அனைவரும் பிரியாணி கேட்டுள்ளனர். அனைத்தும் முடிந்து கடையை மூடிவிட்டோம் என்று மேனேஜர் பிரகாஷ் கூறியுள்ளார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், 'நாங்கள் யார் தெரியுமா? எங்களுக்கே இல்லை என்கிறாயா? தலைவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது கடை திறக்கிறாயா?' என்று கேட்டுத் தாக்கினர்.

அதில் பிரதானமாக இருந்த நபர் யுவராஜ் என்பவர் பாக்ஸிங் ஸ்டைலில் சரமாரியாக மேனேஜரைத் தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாக்கும் நபர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ் என்று தெரியவந்தது.

சிறிது காலம் இந்து அமைப்பு ஒன்றில் இருந்து கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்ட அவர் 2016-ல் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு தனது கூட்டாளிகளுடன் சென்று விட்டு திரும்பிய யுவராஜ் தன்னுடன் வந்த 10 பேர் கும்பலுடன் அந்தப் பிரியாணி கடைக்குள் சென்றுள்ளார்.

ஏற்கெனவே பிரியாணி கடை ஊழியர், மேனேஜருடன் சிறு சிறு தகராறில் யுவராஜ் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போதெல்லாம் வியாபாரம் நடத்தும் இடத்தில் வீண் பிரச்சினை வேண்டாம் என்று விட்டுவிட்டதாகவும், அன்று இதுதான் சாக்கு என்று பழைய பகையை மனதில் வைத்தே தனது ஊழியர்களைக் கடுமையாக 11 பேர் கொண்ட கும்பல் தாக்கியது என்றும் உரிமையாளர் புகார் தெரிவித்திருந்தார்.

ஓட்டல் ஊழியர்களை தாக்கிய அந்த கும்பல் ஹாயாக சென்றுவிட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் ஊழியர்களை யுவராஜ் பாக்ஸிங் ஸ்டைலில் தாக்குவது, மற்ற ஊழியர்களும் உடன் வந்த கும்பலால் தாக்கப்படுவதும் சிசிடிவி காட்சியில் பதிவானது வெளியானது. இது மின்னல் வேகத்தில் இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் பரவியது.

பிரியாணிக்காக இப்படியா தாக்குவார்கள், ஐந்துநாள் அனுதாப அலையை ஒரு பிரியாணி சண்டையில் கெடுத்துவிட்டாயே என்றெல்லாம் மீம்ஸ்கள் பரவின. இது தொடர்பான ட்விட்டரில் #ஓசிபிரியாணி திமுக என்ற ஹேஷ்டேகில் டிரெண்டாகி அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.

ஏற்கெனவே இந்தப் பிரச்சினை வந்தபோதே திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் ஓட்டல் உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்ததோடு இதை திமுக ஏற்றுக்கொள்ளாது நாங்கள் உங்கள் பக்கம்தான் நிற்போம் என்று கூறியதாக ஓட்டல் உரிமையாளர் கூறியிருந்தார்.

தற்போது வீடியோ வைரலாகி  கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை எந்நாளும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி (suspension) வைக்கப்படுகிறார்கள்'' என்று அன்ப்ழகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x