Published : 20 Aug 2018 05:35 PM
Last Updated : 20 Aug 2018 05:35 PM

கேரள வெள்ள நிவாரணம்; தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை அளிக்க முடிவு

கேரள மழை வெள்ளப் பாதிப்புக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை அளிப்பதாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்துக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாக, லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்தோர், நிலச்சரிவினால் உயிரிழப்பு, வீடுகள், சாலைகள் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்தையும் இழந்த பொதுமக்கள் தங்களுக்கு நிவாரண உதவி வேண்டி நிற்கின்றனர்.

இந்நிலையில் ஆதரவற்ற கேரள மக்களுக்காக உலகெங்குமிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு அளிக்க முன் வந்துள்ளனர்.

இது குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர் டிஜிபி, கே.பி. மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கேரள மக்கள் மழை, பெருவெள்ளத்தால் அனுபவித்து வரும் அழிவு, துன்பங்களைக் கண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆழ்ந்த துயரமடைகிறோம். கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் விதமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x