

பழநி, ஸ்ரீரங்கத்தைத் தொடர்ந்து மேலும் 106 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாயக்கிழமை தாக்கல் செய்த அறிக்கை:
கடந்த 2002-ல் தொடங்கப் பட்ட அன்னதானத் திட்டம் தற் போது 518 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த 2012-ல் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், நடப்பு ஆண்டில் ரூ.3.87 கோடியில் மேலும் 106 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்து சமய கோயில்களில் ஆகம விதியின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை யேனும் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 5,351 கோயில்களுக்கு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 1,006 கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். இதற்கென அரசு மானியமாக ரூ.6 கோடி வழங்கப்படும்.
நடப்பாண்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 கோயில்களுக்கு திருப்பணி செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5.3 கோடி நிதியுதவி செய்யப்படும். அதேபோல இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள 1,006 கிராமப்புற சிறிய கோயில்களுக்கும் திருப்பணி செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5.3 கோடி நிதியுதவி வழங்கப்படும். 16 கோயில்களில் ரூ.3.46 கோடியில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். 10 ஆயிரம் மிகச் சிறிய கோயில்களுக்கு ரூ.2.50 கோடியில் விளக்கு, தாம்பாளம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்கித் தரப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க, தொன்மையான 68 கோயில்களை புனரமைத்து புதுப்பிக்க ரூ.22.50 கோடி நிதி ஒதுக்கப்படும். திரு வண்ணாமலை, ராமேசுவரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதிகள் தலா ரூ.25 கோடியில் கட்டப்படும்.
வரும் 2016 பிப்ரவரியில் மகாமகம் நடக்கவிருப்பதை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள 69 கோயில்கள் ரூ.12 கோடியில் செப்பனிட்டு பாதுகாக்கப்படும். கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத் தில் பணிபுரிந்து வரும் 820 பேர், உரிய சம்பள விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து அவர்களது பணி வரன்முறை செய்யப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காலிப் பணியிடங்களில் தினக் கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8,184 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர் களது பணி வரன்முறை செய்யப் படும். இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.44.14 கோடி செலவு ஏற்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.