Last Updated : 13 Aug, 2018 07:35 AM

 

Published : 13 Aug 2018 07:35 AM
Last Updated : 13 Aug 2018 07:35 AM

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு வழங்க கோரிக்கை: ‘பாரத ரத்னா’வுக்கு போட்டி போடும் திமுக, அதிமுக

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என திமுகவினரும், அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். 80 ஆண்டு கள் பொதுவாழ்வு, 60 ஆண்டுகள் எம்எல்ஏ, 50 ஆண்டுகள் திமுக தலைவர், 19 ஆண்டுகள் முதல்வர், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவர் என சாதனை படைத்த கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலில் மட்டுமல்ல கலை, இலக்கியம், திரைப்படம், நாடகம், பேச்சு, பத்திரிகை என பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக 80 ஆண்டுகள் இயங்கி சாதனை படைத்த கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள் ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கும் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மாநிலங் களவை அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அதிமுக பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் இதை வலியுறுத்திப் பேசியுள்ளனர். பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி நேரிலும் வலியுறுத்தியுள்ளார். எனவே, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’விருது வழங்க வேண்டும் என திமுகவினரும், ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை...

நாடு விடுதலை அடைந்த பிறகு 1954-ல் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சிவி ராமன், ராஜாஜி ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தை நிறுவிய மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 45 பேருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் ராஜாஜி, சர் சிவி ராமன், காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம் ஆகிய 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x