

‘தி இந்து’வில் வெளியான உங்கள் குரல் செய்தியின் எதிரொலியாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
‘தி இந்து’ அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் குரல்’ பகுதி மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்புள்ள ஆக்கிரமிப்பு மற்றும் போக்கு வரத்து பிரச்சினைகள் குறித்து வாசகர் ஏ.கே.ரபி தகவல் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டதில் அங்கு, சட்ட விரோத ஆக்கிரமிப்பு, பாதுகாப்பின்மை, சுகாதாரமற்ற நிலை இருப்பது தெரிந்தது. இதுகுறித்து, ‘திஇந்து’வில் கடந்த 4-ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, மேயர் சைதை துரைசாமி உத்தரவின் பேரில், ஐந்தாவது மண்டல அதிகாரி சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். மருத்துவமனையின் வாயிலிலும், பாந்தியன் சாலை மகப்பேறு மருத்துவமனை வாயிலிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
மேற்கொண்டு அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் தடுக்க மருத்துவமனை அருகில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு மாநகராட்சியிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.