Published : 24 Aug 2018 05:30 PM
Last Updated : 24 Aug 2018 05:30 PM

குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது: உயர் நீதிமன்றம் வேதனை

‘நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது, இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

சென்னை வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தை ரோஷன் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியும், 9 மாத குழந்தை சரண்யா மார்ச் 28-ம் தேதியும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

அவர்களை மீட்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா நிர்மல், லதா ரஜினிகாந்த் ஆகியோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை அப்போது விசாரித்த நீதிபதிகள் எஸ் நாகமுத்து, வி.பாரதிதாசன் குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்..

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், மற்ற வழக்குகளை போல அல்லாமல், இந்த வழக்கிற்கு அதீத முக்கியத்துவத்தை அரசு வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், . நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். நீதிமன்றம் அழுத்தம் கொடுத்துதான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. இந்த அரசே முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இங்கே உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, இறந்தபிறகு மட்டுமே பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.

100க்கும் மேற்பட்ட தமிழக குழந்தைகள் விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நோக்கம் என்ன என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது, இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கடிந்துக்கொண்டனர்.

குழந்தை கடத்தல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் செப்டம்பர் 24-ம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x