Published : 20 Aug 2018 04:27 PM
Last Updated : 20 Aug 2018 04:27 PM

மனுஷ்யபுத்திரன் புகார் எதிரொலி: ட்விட்டரில் சுப.வீரபாண்டியன் - ஹெச்.ராஜா கருத்து மோதல்

தனக்கு மிரட்டல் விடுத்ததாக ஹெச்.ராஜா மீது மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததை அடுத்து ட்விட்டரில் சுப. வீரபாண்டியனும், ஹெச்.ராஜாவும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

மனுஷ்யபுத்திரன் கடந்த 18-ம் தேதி ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி பொதுவான ஒரு பெண்ணை மையமாக வைத்து வர்ணித்து கவிதை எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இது குறித்து ஹெச்.ராஜா மனுஷ்யபுத்திரனின் கவிதையைப் பதிவு செய்து காவல்துறையில் புகார் அளியுங்கள் என்று போட்டிருந்தார்.

இதையடுத்து ஹெச்.ராஜா தனக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புகார் அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், ''என் கவிதையில் எந்த ஒரு மதத்தையோ, மதம் சார்ந்த கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதவும் இல்லை. ஆனால் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, எனது கவிதையை இந்துக் கடவுளுக்கு எதிரான களங்கம் கற்பிக்கும் கவிதை என தனது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு காவல் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, சமூக வலைதள சமூக விரோதிகள் எனது தொலைபேசி எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் காரணமாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னுடைய அலைபேசிக்கு நூற்றுக்கணக்கான ஆபாச குறுஞ்செய்திகளும், என்னுடைய உடல் ஊனத்தை கொச்சைப்படுத்தியும் பேசி வருகின்றனர். எச்.ராஜா மீதும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று மனுஷ்யபுத்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுகிறார். ஆபாச வசைகளும் தொடர்கின்றன. ஹெச்.ராஜா இதன் பின்புலத்தில் உள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும்.” என்று பதிவீட்டிருந்தார்.

இதை மேற்கோள்காட்டி ஹெச்.ராஜா “குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

பின்னர் அவர் பதிவின் கீழ் (இந்தியா சுதந்திரமடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஐ துக்க தினமாக அறிவிக்க பெரியார் தெரிவித்தார். இதை திராவிட கழகத்தின் ‘திராவிடன்’ இதழிலும் கட்டுரையாக வெளியிட்டார்.) ஆகஸ்ட் 15 துக்கத்தினம் என்று பெரியார் எழுதி, அப்போதைய திராவிடன் இதழின் முன்பக்க அட்டையில் வந்த புகைப்படத்தை ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் சுப.வீயும், ஹெச்.ராஜாவும் நேரடியாக மோதினர். பதிவுகளுக்கு கீழ் நெட்டிசன்களும் இரண்டு மூன்று பிரிவாக நின்று மோதிக்கொண்டனர். சிலர் ஹெச்.ராஜாவையும், சுப.வீரபாண்டியனையும் விமர்சித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x