Published : 25 Aug 2018 08:20 AM
Last Updated : 25 Aug 2018 08:20 AM

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை (ஆகஸ்ட் 25) வறுமை ஒழிப்பு தினமாக  கடைபிடித்து வருகிறார். அவர் தனது பிறந்தநாளையொட்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் எனது பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகளை செய்வதுபோல், இந்த ஆண்டும் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் தங்கள் பதவி களை தக்கவைத்துக் கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை.

இவற்றையெல்லாம் எதிர் காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தேமுதிக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். தமிழக மக்கள் தங்கள் ஆதர வையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தரவேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம். நான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது எனக் காக பிரார்த்தனை செய்த தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று

நடந்தது. இதில் பங்கேற்ற விஜய காந்த், பிரேமலதா ஆகியோர் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினர். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்ப உள்ளதாக தேமுதிக ஏற்கெனவே அறிவித்திருந்தது. விழாவில் விஜயகாந்த் எதுவும் பேசவில்லை.

பிரேமலதா பேசும்போது, ‘‘அமெரிக்காவில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வந்தார். முதல்கட்ட மருத்துவ சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து சென் னைக்கு விமானத்தில் தொடர்ந்து 25 மணி நேரத்துக்கும்மேல் பயணம் செய்த அவர், நேரடியாக வீட்டுக்கு செல்லாமல், நள்ளிரவு 3 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதியின்நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் தற்போது 2 பெரிய தலைவர்கள் மறைவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் 2-ம் கட்ட மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு, விஜயகாந்த் தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைப்பார்’’ என்றார்.

இந்த விழாவில் தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் இளங்கோவன், உயர் நிலைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன் உட்பட நூற் றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x