Published : 23 Aug 2018 10:28 AM
Last Updated : 23 Aug 2018 10:28 AM

முக்கொம்பு - கொள்ளிடம் மேலணை உடைந்தது - 7 மதகுகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் 7 மதகுகள் புதன் கிழமை இரவு 8.30 மணியளவில் முற்றிலுமாக இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூரிலிருந்து அகண்ட காவிரியாக வரும் காவிரி ஆறு திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.

காவிரியில் அதிக அளவில் வரும் தண்ணீர் காவிரியில் முழுமையாக செல்ல முடியாது என்பதால் முக்கொம்பு பகுதியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

இந்த இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பெரிய அளவிலான ஷட்டர்களுடன் கூடிய அணை உள்ளது. இதன் மீது பாலம் அமைக்கப்பட்டு இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக கர்நாடகத்திலிருந்து அதிகப்படியான அளவு தண்ணீர் வந்ததால் மேட்டூரிலிருந்து ஏறத்தாழ விநாடிக்கு 1 லட்சம் முதல் 2.5 லட்சம் கன அடி வரை திறக்கப்பட்ட தண்ணீரில் காவிரியில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி போக ஏறத்தாழ விநாடிக்கு 2 லட்சம் கனஅடி அளவுக்கு கடந்த 10 தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த இரு தினங்களாக குறைக்கப்பட்டது. புதன்கிழமை மாலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இந்தநிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் நடுக்கரை பகுதியிலிருந்து 6 முதல் 12 மதகுகள் வரையில் உடைந்து முற்றிலுமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, பாலத்தின் இரு பகுதிகளிலும் போக்குவரத்தை தடை செய்தனர்.

2005 மற்றும் 2012-ம் ஆண்டு களில் வெள்ளம் வந்த போது ஏறத்தாழ விநாடிக்கு 3 லட்சம் கன அடி அளவுக்கு இந்த அணை வழியாக தண்ணீர் சென்றுள்ளது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்த்தர் காட்டன் என்பரால் 1836-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் செலவில் இந்த அணை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் நீளம் 630 மீட்டர். 45 மதகுகளுடன் கட்டப்பட்டது.

தற்போது முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த இந்த அணையின் 7 மதகுகள் உடைந்தால், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரில் பெரும்பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்கிறது. ஆனால், தற்போது மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், கொள் ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்படவோ, கரைகளில் உடைப்பு ஏற்படவோ வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனாலும், முக்கொம்பு மேலணையிலிருந்து திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேருவதிலும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக திருச்சி நெ.1 டோல்கேட் - திருவானைக்காவல் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாலத்தின் இரு தூண்கள் ஆக.18-ம் தேதி உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x