

அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மாற்று வழி மருத்துவத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இயற்கை முறையில் கர்ப்பிணிகள் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. ஆனால், தாய்சேய் நலனைக் கருத்தில் கொண்டு வீடியோவை பார்த்து யாரும் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையத்தின் சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இவரது கைது மாற்றுவழி மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மருத்துவம் என்றால் அது அலோபதி மருத்துவம் தான். மற்ற மருத்துவ முறைகள் புறந்தள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மாற்று மருத்துவங்கள்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட் ராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எந்த மருத்துவமும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுவதே சரியானது. மரபுவழி மருத்துவமும் அவ்வாறுதான் நடந்து வருகிறது. இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும். ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதிசெய்ய முடியும்.
மரபுவழி மருத்துவத்தை ஒரு மருத்துவமாகவே நடைமுறையில் அரசுகள் ஏற்பதில்லை. மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்றும், மண்ணின் மருத்துவங்கள் மாற்று மருத்துவம் என்ற பெயரிலும் புறந்தள்ளப்பட்டது. மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் அரசின் இத்தாக்குதலைத் தொடர்ந்து அனுமதித்தால், இன்றைக்கு பல போராட்டங்களுக்கிடையில் முன்னேறி வரும் மரபு வழி வேளாண்மையும் புறந்தள்ளப்படும்.
ரசாயன மருத்துவம் போலவே, ரசாயன வேளாண்மையும் மீண்டும் உறுதிப்படும். எனவே, ஹீலர் பாஸ்கரையும் அவரது அலுவலக மேலாளரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். மரபுவழி மருத்துவத்தை மருத்துவமாக அங்கீகரித்து அதை ஒரு கல்வித்திட்டமாக ஆக்குவதற்கும் முறைப்படுத்துவதற்கும் செயல் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூரில் கிருத்திகா என்ற பெண்ணுக்கு அவரது கணவர் வீடியோவைப் பார்த்து பிரசவம் பார்த்துள் ளார். அப்போது அந்த பெண் இறந்தது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிக்காட்டுதலோ, பயிற்சியோ, முன்அனுபவமோ, எந்தவொரு அடிப்படை அறிவுமின்றிப் பிரசவம் பார்க்க முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தகக்து என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறு என கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்தும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்துக்கும், பாரம்பரியமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டு குழப்பி திசை திருப்பும் துரோகச் செயலாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அலோபதி மருத்துவம்
கல்யாணி மருத்துவமனை பொதுநலம் தலைமை மருத்துவர் நா.எழிலன்: மருத்துவம் என்பது உயிர்காக்கும் சிகிச்சையாகும். ஒவ்வொரு கால சூழ்நிலையில் ஒவ்வொரு மருத்துவ முறைகள் இருந்தன. அறிவியல் விழிப்புணர்வுக்கு பின்னர் பல கட்ட ஆராய்ச்சிகளைக் கடந்து அலோபதி மருத்துவம் வளர்ந்துள்ளது.
தற்போது மனிதர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளது. பிரசவத்தின் போது தாய்சேய் இறப்பு விகிதம்குறைந்துள்ளது. ஸ்கேனிங், தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு சிகிச்சை, பிறவி ரீதியாக பிரச்சினை இருந்தால் சரிசெய்வது என அலோபதி மருத்துவம் வளர்ந்து நிற்கிறது. ஆனால், இவர்கள் அலோபதி மருத்துவமே தமிழர்களுக்கு எதிரானது போல் உருவாக்குகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க எந்த செலவும் இல்லை. ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்க முடியும். வீட்டில் சுகப்பிரசவம் பார்க்கலாம் என்று சொல்பவர்களுக்கு எந்தஅனுபவம் இல்லை. மருத்துவம் படிக்கவில்லை. பிரசவத்தின் போது தாய்க்கோ, சேய்க்கோ திடீரென்று உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் இவர்கள் என்ன செய்வார்கள். பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
அறிவியலை மக்களின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தாமல், பிற்போக்குத்தனமாக விஷயத்துக்கு பயன்படுத்தக்கூடாது. ஹீலர் பாஸ்கர் கைது என்பது மருத்துவம் எனக்கு தெரியும் என சொல்லிட்டு எந்த அனுபவமும் இல்லாமல் ஏமாற்று வேலை செய்பவர்கள் மீதான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தை முடக்கும் முயற்சி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவர்களிடம் கேட்ட போது, “மருத்துவம் அறிவியலைச் சார்ந்து இருக்க வேண்டும். பிரசவம் என்பது கவனமாக பார்க்கக்கூடியது. இதனை விளையாட்டாக பார்க்கின்றனர். முழுமையான அறிவியலைத் தெரிந்தவர்களால் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும். அந்த காலத்தில் பிரசவத்தின் போது சிசு மரணங்கள் அதிகமாக இருந்தன. ஆனால், தற்போது சிசு மரணங்கள் குறைவாக உள்ளது. பிரசவத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது.
சித்த மருத்துவம் படிக்கும் நாங்களே பிரசவம் பார்ப்பதில்லை. தேவையான வழிகளை மட்டுமே காட்டுகிறோம். மருத்து வரின் ஆலோசனையின்படி இயற்கை பிரசவம் நிகழ வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இவர்கள் என்ன படித்தார்கள். என்ன அனுபவம் இருக்கிறது. எதை வைத்து வீட்டில் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இதுபோன்ற நபர்களைக் கைது செய்தது தவறில்லை. உடனடியாக சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மாற்று மருத்துவத்தை அரசு முடக்க நினைக்கிறது என்று சிலர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. சித்தா டாக்டரை கைது செய்யவில்லை. மக்களை ஏமாற்றும் நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.ஹீலர் பாஸ்கர்