Published : 09 Aug 2018 02:57 PM
Last Updated : 09 Aug 2018 02:57 PM

விமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார்? - திருமாவளவன் கேள்வி

பெங்களூரு விமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழ்நாடு காவல்துறையினர் இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அவர் தூத்துக்குடி பயங்கரம் குறித்து பேசியதாலும் தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிராக பேசி வருவதாலும் பழி வாங்கும் போக்கில் பழைய வழக்குகளுக்காகத் தற்போது அவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. அதுவும் அவரை அண்டை மாநிலத்தில் விமான நிலையத்திலேயே கைது செய்திருப்பது ஏன்? தமிழகத்திற்கு அவர் வந்த பின்னர் கைது செய்திருக்கலாம் அல்லவா? அந்த அளவுக்கு அவசரம் காட்ட அப்படி அவர் என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார் என தெரியவில்லை.

இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும். தமிழக அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், தமிழ் தேசிய உணர்வாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மீது தொடர்ந்து ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x