

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). பாமக பிரமுகரான இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள் உள்ளனர். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வீட்டின் முன்புற திண்ணையில் முருகன் தூங்கினார். வீட்டுக்குள் மனைவி மற்றும் மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் முருகன் அலறல் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த மகன்கள் ஓடி வந்து பார்த்தபோது, முருகன் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் முருகன் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அதே கிராமத்தில் உள்ள ராதாகிருஷ்ணன், கண்ணன், வீரபத்திரன் ஆகிய 3 பேருடைய வீடுகளுக்கு தீ வைத்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பாமகவினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விழுப்புரம் எஸ்பி மனோகரன், டிஎஸ்பி சீதாராமன் ஆகியோர் வந்து முருகன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு, முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
கொலை வழக்கில் சாட்சி
கடந்த 2006-ம் ஆண்டு முருகன் தம்பி வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவரை கள்ளச்சாராய விற்ப னையை காட்டிக் கொடுத்ததாக கூறி ராதாகிருஷ்ணன் தரப்பினர் கொலை செய்தனர். இது தொடர்பாக, 14 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முதல் சாட்சியாக இருந்தவர் முருகன்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து திண்டிவனம் நீதிமன்ற த்துக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில் திங்கள்கிழமை சாட்சி விசாரணை தொடங்குகிறது.