Published : 29 Aug 2018 07:48 AM
Last Updated : 29 Aug 2018 07:48 AM

சாகித்ய அகாடமியால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கு விருது: ‘இந்தியாவின் சிறந்த புத்தகம்’ என ‘ஃபிக்கி’ கவுரவம்

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ நாவலுக்கு இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) விருது வழங்கியுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் கடந்த 2003-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. சாகித்ய அகாடமி இந்த நாவலை 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதலாவதாக, இந்தியில் ‘நாகபனீ வன் கா இதிஹாஸ்’ என்ற பெயரில் இந்த நாவலை மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழி பெயர்த்துள்ளார்.

சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல், இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை இந்த ஆண்டில் பெற்றுள்ளது. ‘ஃபிக்கி’ இந்த விருதை வழங்கியுள்ளது. இத் தகவலை மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விருது பற்றி கவிஞர் வைரமுத்து கூறியதாவது:

என் நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்த இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்புக்கு நன்றி. இது எனக்கு நேரடியான விருது அல்ல; சாகித்ய அகாடமிக்கான விருது. சாகித்ய அகாடமிதான் இந்திய மொழிகளுக்கெல்லாம் விருது தரும். ஆனால், தமிழில் வெளிவந்து இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசத்தால் சாகித்ய அகாடமி விருது பெறுவது கூடுதல் கவனம் பெறுகிறது.

‘இந்தியாவின் பழமையான, சிறந்த மொழி தமிழ்’ என்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் சமீபத்தில் ஆற்றிய உரை நமக்கெல்லாம் பெருமிதம் தந்தது. அதே நேரத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழம் நழுவி விழுந்த பாலில் கற்கண்டும் விழுந்து கரைந்ததுபோல இருக்கிறது இச்செய்தி.

தமிழ் மொழி தன் தகுதியால் மொழிகளின் வெளிகளைத் தாண்டி விரிந்துகொண்டே செல்கி றது. இந்த விருது ஒவ்வொரு தமிழரையும் தங்கள் உயரத்தில் ஓர் அங்குலம் உயர்த்தி இருப்பதாகக் கருதுகிறேன். மகிழ்ச்சி; மிக்க மகிழ்ச்சி.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x