

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.17 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கன மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக மாநில அணைகள் நிரம்பியதை அடுத்து, 90 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
சேலம், தருமபுரி மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிக அளவு வந்து கொண்டிருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்தது.
இதனால், காவிரி ஆற்றில் 42 ஆயிரத்து 252 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் 89,712 அடியாக இருந்த நீர்வரத்து தற்போது பாதியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சரிய தொடங்கியுள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 79.42 டிஎம்சியாக உள்ளது.